(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

 ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள  2022 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் உலகளாவிய ரீதியில் பொருளாதார இயங்குகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. 

கொவிட் - 19 வைரஸ் பரவலின் புதிய அலைகள், தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், விநியோக முறைகளில் ஏற்பட்டுள்ள சவால்கள், அதிகரித்துச்செல்லும் பணவீக்கத்தினால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் போன்ற காரணிகள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

அந்தவகையில் இலங்கையைப் பொறுத்தமட்டில் 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 சதவீதமாக அமையக்கூடும் என்று மதிப்பீடு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களம், இவ்வாண்டில் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட முக்கிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 'பணவீக்க அதிகரிப்பிற்கு மத்தியிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளால் கடந்த 2021 ஆம் ஆண்டின் பின்னரைப்பாகத்தில் வட்டிவீதங்கள் உயர்த்தப்பட்டன. பொருளாதார மீட்சியை அடைந்துகொள்வதற்கும் நிதி மற்றும் விலை உறுதிப்பாட்டைப் பேணுவதற்கும் மத்திய வங்கியானது காலவரையறையுடைய மிகத்தெளிவான கொள்கை மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியமாகும்' என்று ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 மேலும் தெற்காசியப்பிராந்தியம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களம், மிகவும் மந்தகரமான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமானது கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் உருவாவதற்கும் வைரஸ் பரவலின் புதிய அலைகள் தோற்றம் பெறுவதற்கும் இடமளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.