(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தையும் பொலிஸாரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்கு திட்டமிடும் சிலரே நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது என்று காண்பிப்பதற்காக , சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 

இவ்வாறான நபர்கள் விரைவில் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அப்பலோ வைத்தியசாலையின் மலசலகூடத்திலிருந்தும், பொரளை தேவாலயத்திலிருந்து குண்டுகள் மீட்க்கப்பட்டமையின் பின்னணியில் பாரிய சதிக்காரர்கள் உள்ளனர். 

இவர்கள் யார் என்பது வெகுவிரைவில் கண்டு பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொரளை தேவாலயத்திலிருந்து கைகுண்டுகள் மீடகப்பட்ட விவகாரம் தொடர்பான பொலிஸாரின் விசாரணைகள் அதிருப்தியளிப்பதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். 

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொலிஸார் குறித்து இது போன்ற கருத்துக்களை முன்வைப்பதால் மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடையும். 

அப்பலோ வைத்தியசாலையில் இவ்வாறு குண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு , அதனை வைத்த நபரே மீளவும் எடுத்தார். 

அதேபோன்று தான் பொரளை தேவாலயத்தில் குண்டினை வைத்த நபரே அது தொடர்பில் அங்கிருந்து அருட்தந்தைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். 

இது தொடர்பில் வாக்குமூலமளித்த 14 வயது சிறுவன் , நீதவான் முன்னிலையில் வாக்குமூலமளித்த போது ' குறித்த தேவாலயத்தில் சுமார் 8 மாதங்களாக பணியாற்றும் முனி என்ற நபரே குண்டுடனான பொதியை தந்தார்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் குண்டினை வழங்கிய நபரே அதனை எடுத்து மேலே வைத்துள்ளார். அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். குண்டைச் சுற்றி இறப்பர் பட்டி கட்டப்பட்டிருந்ததோடு , அதில் பத்தி மற்றும் தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. தீக்குச்சிகளுக்கு தீமூட்டும் போது குண்டு வெடிக்கும் வகையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது மாத்திரமின்றி குறித்த நபரின் அறையில் பத்தி மற்றும் தீக்குச்சிகள் என்பனவும் காணப்பட்டன. 

அவ்வாறானதொரு நபரை கைது செய்யும் போது , தேவாலயத்திலுள்ள நபரை கைது செய்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகக் கூறப்படுகின்றமை கீழ் மட்ட வாதமல்லவா? இது பொறுத்தமற்ற செயற்பாடாகும்.

மேலும் சம்பவ தினத்தன்று காலை குறித்த தேவாலயத்திற்கு கால் ஊனமுற்றதைப் போன்று நபரொருவர் வந்தமை உண்மையாகும். குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டிய சி.சி.டி.வி. காணொளியை ஊடங்கங்களுக்கு வழங்கியுள்ளமையால் , சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகக் கூடிய வாய்ப்புள்ளது.

அவ்வாறெனில் குறித்த நபரை இனங்காண்பதற்கு தேவாலயத்தினரே எமக்கு உதவ வேண்டும். விசாரணைகளின் நிமித்தமே இவ்வாறான தகவல்கள் தொடர்பான இரகசிய தன்மை பேணப்படுகிறது. 

எனினும் அவ்வாறான தகவல்கள் எவரேனும் விசாரணைகளுக்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவார்களாயின் அது சந்தேகநபர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.

எனவே இதுபோன்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். பொலிஸார் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். 

காரணம் இதுவரைக் காலமும் பொலிஸாரே நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநிறுத்தியுள்ளனர். 

பொலிஸார் இன்றி அதனை செய்ய முடியாது. மக்கள் பொலிஸார் மீது கொண்டுள்ள நம்பிக்கை சரிவடையும் வகையில் அவர்கள் இதுவரையில் செயற்பட்டதில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை விரைவாக கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே மாலை 3 மணிக்கு பின்னர் பதிவாகியிருந்த சி.சி.டி.வி. காணொளிகள் மாத்திரம் கண்காணிப்பட்டன.

 எனினும் காலையில் பதிவாகிய காட்சிகளை அவதானிக்க வேண்டாம் என்று பொலிஸார் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. அதே போன்று சி.சி.டி.வி. காணொளி பதிவுகளை அழிக்குமாறும் பொலிஸார் கூறவில்லை.

விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கப் பெறுமாயின் அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தினங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ளன.

 பிரதான சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளார். அதே போன்று தான் எப்பலோ வைத்தியசாலை மற்றும் பொரளை தேவாலயத்தில் குண்டு வைக்கப்பட்டதன் பின்னணியில் சதிக்காரர்கள் உள்ளனர்.

அரசாங்கத்தையும் , பொலிஸாரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்ற நபர்கள் உள்ளனர். அவர்களும் எதிர்காலத்தில் நிச்சயம் கைது செய்யப்படுவர். நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையே காணப்படுகிறது என்று காண்பிப்பதற்காகவே இவ்வாறான சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன என்றார்.