உலக நம்பர் வன் டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச்சின் விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் இரண்டாவது முறையாகவும் வெள்ளக்கிழமை இரத்து செய்துள்ளது.

இதனால் அவர் 2022 அவுஸ்திரேலிய ஓபனில் பங்கெடுப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலியா ஒபன் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என அவுஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். 

அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.

இதனிடையே அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். 

விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஆனால், குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாவை இரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் இரத்து செய்துள்ளார். 

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந் நிலையில் இது குறித்து அலெக்ஸ் ஹாவ்கே கூறுகையில்,

இன்று நான் குடியேற்றச் சட்டத்தின் 133C(3) பிரிவின் கீழ் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நோவக் ஜோகோவிச் வைத்திருந்த விசாவை பொது நலன் கருதி, உடல்நலம் மற்றும் நல்ல ஒழுங்கு அடிப்படையில் இரத்து செய்தேன் என்றார்.

இதேவேளை ஜோகோவிச் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் நோவக் ஜோகோவிச் சனிக்கிழமையன்று அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளுடன் ஒரு நேர்காணலுக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.