(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு இன்றுடன் ஆயிரம் நாட்கள் நிறைவடைந்துள்ளன. 

இதனை முன்னிட்டு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், சகல மறை மாவட்ட ஆயர்களின் பங்குபற்றலுடன் தேவத்தை - தேசிய பெசிலிகா தேவாலயத்தில் சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரை காலமும் நியாயம் வழங்கப்படாமை, நாட்டில் மக்கள் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றுககு தீர்வு கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்து இன்றைய தினம் விசேட ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று காலை 10 மணியளவில் பேராயர் தலைமையில் ஆராதனை ஆரம்பமாகின. 

இதன் போது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்புக்களுக்கு இலக்கான கொழும்பு - கொச்சிக்கடை புனிய அந்தோனியார் திருத்தலம் மற்றும் நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டிய தேவாலயம் உள்ளிட்டவற்றின் அருந்தந்தையர் மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும் இந்த விசேட ஆராதனையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.