(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குதல் தொடர்பில் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய மாதாந்த சம்பளம் பெறும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த உத்தியோகத்தர்களும் , நாளாந்த சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களும் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களும் இந்த கொடு;ப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சம்பளமற்ற விடுமுறை பெற்றிருக்கும் உத்தியோகத்தர்கள் இந்த கொடுப்பனவிற்கு உரித்துடையவர்களாக மாட்டார்கள். 

அரை சம்பள விடுமுறை பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு இந்த கொடுப்பனவின் அரைவாசியே உரித்துடையதாகும் என்றும் குறித்த சுற்று நிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளாந்த சம்பளம் பெறுபவர்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க வேண்டிய முழுமையான நாட்களும் சேவைக்கு சமுகமளித்திருந்தால் , முழு கொடுப்பனவும் செலுத்தப்படல் வேண்டும். அவ்வாறு சமுகமளிக்கவில்லை எனில் சேவைக்கு சமூகமளித்த நாட்களின் விகிதத்திற்கு ஏற்ப கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும்.

எவரேனும் ஒரு உத்தியோகத்தர் பல ஓய்வூதியம் அல்லது ஓய்வூதியத்துடன் விதவைகள் , தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வூதியத்தைப் பெறுவார்களானால் அத்தகைய நபருக்கு ஒரு மாதத்திற்கு கொடுப்பனவாக 5000 ரூபா மாத்திரமே உரித்துடையதாகும்.

நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளுக்கு ஏற்ப, மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு உரித்தாகும் கொடுப்பனவு மட்டுமே உரித்தாகும். 

ஓய்வூதியதாரர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவது குறித்து ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்தினால் மேலதிக தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படும்.

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க சபைகளின் உத்தியோகத்தர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவது பற்றிய அறிவுறுத்தல்கள் பொது தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும். 

இந்த சுற்றறிக்கை திறைசேரியின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொதுசேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.