(எம்.எம்.சில்வெஸ்டர்)

14 ஆவது தடவையாக நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை  முதல் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வரை மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.

நாளைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் போட்டியில் போட்டி ஏற்பாடு நாடான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அவுஸ்திரேலிய அணி எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளுமே இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

1988 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில்  இந்தியா 4 தடவகைளும், அவுஸ்திரேலியா 3 தடவகைளும், பாகிஸ்தான் 2 தடவைகளும்  இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகியன தலா ஒரு தடவையும் உலக சம்பியன்களாக முடிசூடிக்கொண்டுள்ளன.

நியூஸிலாந்து  மற்றும் இலங்கை ஆகியன முறையே 1998, 2000 ஆம் ஆண்டுகளில் உப சம்பயன்களாகியுள்ளன.

16 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் தலா அணிகள் 4 குழுக்களில் அங்கம் வகிக்கின்றன.

இதில் நடப்பு உலகச் சம்பியனான பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியத்துடன் குழு ஏ யில் இடம்பெற்றுள்ளது.

தென் ஆபிரிக்கா, இந்தியா, அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்க ஆகியன குழு பியிலும், ஸிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூகீனியா, பாகிஸ்தான் ஆகியன குழு சீயிலும் அங்கம் வகிக்கின்றன.

போட்டி ஏற்பாடு நாடான மேற்கிந்தியத் தீவுகள் , இலங்கை ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றுடன் குழு டீயில்  இடம்பெற்றுள்ளது. இப்போட்டித் தொடரில் மிகவும் கடினமான குழுவாக  குழு  டீ  காணப்படுகின்றது.

லீக் முறைப்படி நடைபெறும் இப்போட்டித் தொடரில், ஒவ்வொரு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

துனித் வெல்லாலகே தலைமையிலான இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை நாளைய தினமும் (14), அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் 17 ஆம் திகதியன்றும், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 21 ஆம் திகதியன்றும் சந்திக்கவுள்ளன.