இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகவிருக்கும் திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்க வைக்க ஹொலிவுட் நடிகர் தேவ் பட்டேலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

முத்தையா முரளிதரன் சுயசரிதையை தழுவி '800' என்ற பெயரில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் திரைப்படம் ஒன்று தயாராகவிருப்பதாகவும், அதில் நடிகர் விஜயசேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கவிருப்பதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. 

பின்னர் உலக அளவில் தமிழின உணர்வாளர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக இப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகினார். இதனை தயாரிப்பு நிறுவனமும் உறுதிப்படுத்தியது. 

பிறகு முத்தையா முரளிதரனாக நடிக்க வைப்பதற்கான நடிகர்களின் தேடல் தொடர்ந்தது. தற்போது லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நடிகரான தேவ் பட்டேலிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். 

இவர் ஏற்கனவே ஓஸ்கர் விருது வென்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் நடித்திருந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கைசாத்திட்ட பிறகு, அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சிறந்த காட்சி காரணியாக இருக்கும் என படக்குழுவினரும், திரையுலகினரும் தெரிவிக்கிறார்கள்.