சிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட ஒருநாள் அணியில் இருந்து அவிஷ்க பெர்னாண்டோ, ஜனித் லியனகே, கமில் மிஸ்ரா ஆகியோர் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனது.

இதன் காரணமாக மேலும் சில வீரர்களை அணியில் புதிதாக இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஆரம்பக் குழாமில் இடம்பெறாத தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், ஷிரான் பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கு போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தசுன் ஷனக்கவின் தலைமையில் பெயரிடப்பட்ட இலங்கை அணியின் உப தலைவராக இருக்கும் தனஞ்சய டி சில்வா, அவரது மனைவி பிரசவம் காரணமாக மகப்பேறு விடுமுறையில் இருப்பதால் அவருக்கு பதிலாக கமிந்து மெண்டிஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குத் தகுதிபெறும் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அண்மையில் முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆண்டின் வளர்ந்து வரும் வீரராக தெரிவு செய்யப்பட்ட ஜனித் லியனகே, கொவிட் தொற்று காரணமாக அணியில் இருந்து துரதிஷ்டவசமாக வெளியேறினார். 

தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஜனித் லியனகே 4 போட்டிகளில் 2 அரை சதங்களுடன் 108 ஓட்டங்களைப் பெற்று ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை பெற்றிருந்தார்.

இந் நிலையில் அவருக்கு பதிலாக லங்கா பிரீமியர் லீக் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 327 ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸும் அணியில் இடம்பெற்றுள்ளார். 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்ட குசல் மெண்டிஸ் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் வீரர் ஆவார்.

இதேவேளை லசித் மலிங்கவின் பாணியில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் நுவான் துஷாரவும் பெயரிடப்பட்ட அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 

நுவான் துஷார லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி எட்டு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கமில் மிஸ்ராவுடன் இணைந்து இலங்கை அணியுடன் இணைந்த சமிக குணசேகரவும் சிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான குழாமில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை அணி - தசுன் ஷனக (தலைவர்), தினேஷ் சண்டிமால்,, பத்தும் நிஸ்ஸங்க, மினோட் பானுக, சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், ஷிரான் பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், சமிக கருணாரத்ன, மகேஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சிமென், நுவான் துஷார, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரம மற்றும் சமிக குணசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.