(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச அதிகாரிகள் தங்கள் கிராமங்களுக்கு சென்று அரசியல் செய்யும் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒருசிலர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்சவினர் எப்போதும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றனர்.  அதிகாரம் என்பது யாரிடமும் இருக்கலாம் எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம். 

இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே முன்னின்று செயற்படும். அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளும்போது அரச ஊழியர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும், அரசாங்கத்தின் வருமானங்களின் பிரதிபலன் மக்களுக்கு போய்ச்சேர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நிறுவனங்களின் அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கின்றனர், இது தொடர்பாக ஒருவருட காலம் அவதானித்து வந்தோம். இனிமேல் அரச அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.