சுப்பர் லீக்கில் முதலாவது சம்பியன் பட்டத்தை புளூ ஸ்டார் சுவீகரித்தது

Published By: Digital Desk 4

11 Jan, 2022 | 09:49 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை களுத்துறை புளூ ஸ்டார் கழகம் சுவீகரித்து வரலாறு படைத்தது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற புளூ ஈக்ள்ஸ் அணிக்கு எதிரான தீர்மானம் மிக்க கடைசிக் கட்ட லீக் போட்டியில் 60 நிமிடங்களுக்கு மேல் 10 வீரர்களுடன் விளையாடிய புளூ ஸ்டார் கழகம் 3 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடியது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் பிரதான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றில் புளூ ஸ்டார் கழகம் 17 வருடங்களுக்கு பின்னர் சம்பியனாகியுள்ளது.

2004இல் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டியிலேயே புளூ ஸ்டார் கடைசியாக சம்பியனாகியிருந்தது.

கடும் உஷ்ணத்துக்கு மத்தியில் நடைபெற்ற இன்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே புளூ ஸ்டார் கழகம் 2 கோல்களையும் புளூ ஈக்ள்ஸ் ஒரு கோலையும் போட்டு அசாத்திய ஆற்றல்களை வெளிப்படுத்தின.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மொஹமத் பஸால் பெனல்டி எல்லைக்குள்ளிருந்த பந்தை கோலினுள் புகுத்தி புளூ ஸ்டார் அணியை முன்னிலையில் இட்டார்.

3 நிமிடங்கள் கழித்து கோலுக்கு மிக அருகாமையிலிருந்து மிகவும் சாதுரியமாக மொஹமத அர்ஷாத் கோல் போட்டு புளூ ஸ்டார் அணியை உற்சாகப்படுத்தினார். கோல் போட்ட உற்சாக மிகுதியால் அவர் ஜேர்சியை கழற்றியதால் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

அடுத்த நிமிடமே புளூ ஈக்ள்ஸ் சார்பாக லசித்த பெர்னாண்டோ கோல் போட்டு கோல் நிலையை 1 - 2 என ஆக்கினார்.

அதன் பின்னர் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க புளூ ஸ்டார் வீரர்கள் முயற்சித்தபோதிலும் ஏகப்பட்ட வாய்ப்புகளை தவறவிட்டவண்ணம் இருந்தனர்.

இதனிடையே 34ஆவது நிமிடத்தில் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான அர்ஷாத் சிவப்பு அட்டையுடன் களத்தை விட்டு வெளியேறினார்.

இதனை சாதகமாக்கிக் கொண்ட புளூ ஈக்ள்ஸ் 39ஆவது நிமிடத்தில் என். மல்ஷான் மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது.

தொடர்ந்து இரண்டு அணிகளும் முன்னிலை பெறுவதற்கு கடுமையாக முயற்சித்த போதிலும் அவை பலனளிக்கவில்லை. இடைவேளையின்போது 2 அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டிருந்தன.

இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இரண்டு அணியினரும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்த வண்ணம் இருந்தனர். புளூ ஸ்டார் கழகத்துக்கு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவை கோட்டை விடப்பட்டன.

போட்டியின் 84ஆவது நிமிடத்தில் இடதுபுறத்திலிருந்து ஷெனால் சந்தேஷ் மிகவும் சாதுரியமாக பரிமாறிய பந்தை மொஹமத் இஷான் கோலாக்கினார். இந்த கோலே புளூ ஸ்டார் கழகம் சம்பியனாவதை உறுதிசெய்தது.

புளூ ஸ்டார் கழகத்தின் முன்கள வீரர் ஷெனால் சந்தேஷ் மொத்தமாக 10 கோல்களைப் போட்டு அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன் தங்கப் பாதணி அவருக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற மற்றைய போட்டியில் கலம்போ எவ்சியை 3 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட சீ ஹோக்ஸ் உப சம்பியன் (2ஆம் இடம்) பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் மிகவும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளப்பட்ட இப் போட்டியில் மொஹமத் ஆக்கிப் (15 நி.) முதலாவது கோலைப் போட்டு கலம்போ எவ்சியை முன்னிலையில் இட்டார்.

37ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் அணித் தலைவர் சுபாஷ் மதுஷான் கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணிகளும் கடுமையாக விளையாடின. போட்டியின் 65ஆவது நிமிடத்தில் சலன சமீர விதிகளுக்கு முரணான வகையில் எதிரணி வீரரை பெனல்டி எல்லைக்குள் வீழ்த்தியதால் சீ ஹோக்ஸுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அதனை மொஹமத் மொஹமத் ஹஸ்மீர் கோலாக்கினார்.

இதனைத் தொடர்ந்து மாற்று வீரர் அவிஷ்க கவிந்து 76ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸின் 3ஆவது கோலைப் போட்டார்.

போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருந்தபோது கலம்போ எவ்சி அணித் தலைவர் மோமாஸ் யாப்போ கோல் போட்டு அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால், சீ ஹோக்ஸ் அந்த நம்பிக்கையைத் தகர்த்து போட்டியில் வெற்றிபெற்று 2ஆம் இடத்தை உறுதிசெய்துகொண்டது.

இன்றுடன் சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி நிறைவடைந்த போதிலும் பரிசளிப்பு வைபவத்தை கால்பந்தாட்ட விருது விழாவின்போது நடத்த சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இவ் விருதுவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ளது.

நியூ யங்ஸ் மேன்முறையீடு

நியூ யங்ஸ் கழகம் 8 மாதங்களுக்கு முன்னர் கலம்போ எவ்சிக்கு எதிராக தாக்கல் செய்த ஆட்சேப மனு, ஒழுக்காற்று மற்றும் நெறிமுறைக் குழுவினால் கடந்த 7ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்து நியூ யங்ஸ் கழகம் மேன்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையை ஒழுக்காற்று மற்றம் நெறிமுறை குழு விரைவில் விசாரணை நடத்தும் என சம்மேளன செயலாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் (ஓய்வு நிலை) உப்பாலி ஹேவகே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35