குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டிடத்தின் ஐந்தாவது மாடி ஜன்னலிலிருந்து குதித்த சந்தேக நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

46 வயதான பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்காக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சந்தேக நபரை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்துருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 5 ஆவது மாடியின் ஜன்னலிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் இராஜகிரிய, அங்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வெவ்வேறு சங்கங்களை ஆரம்பித்து 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.