(எம்.மனோசித்ரா)

கொரிய தேசிய சபையின் சபாநாயகர் 3 நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இரு நாடுகளினதும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில்  இந்த விஜயம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் கொரிய தேசிய சபையின்  சபாநாயகர் பார்க் பியோங்-செங் ஆகியோர் சியோலில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் அண்மையில் கலந்துரையாடினர்.

குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை போன்ற இலங்கையின்  அரசியலமைப்பின் கீழ் உள்ள பாராளுமன்ற முறைமையின் அடிப்படையில் அமைச்சரவை அரசாங்கத்தின் கட்டமைப்புடன் இணைத்தல் போன்ற அம்சங்களில் சபாநாயகர் பியோங்-செங் உயிரோட்டமான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் தற்போதைய தேர்தல் முறைமை மற்றும் பாராளுமன்றக் குழுவினால் தற்போது  கலந்துரையாடப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கொரிய சபாநாயகருக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்தார்.

தெரிவுக்குழுக்கள், ஆலோசனைக் குழுக்கள் மற்றும் நிலையியற்குழுக்களின் பாராளுமன்றத்திற்கு வெளியேயான பணியின் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய குழுக்களின் கட்சி  அமைப்புடனான தொடர்பு குறித்தும் வெளிநாட்டலுவல்கள்  அமைச்சரும் சபாநாயகரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

இலங்கையின் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  விடுத்த அழைப்பை கொரிய தேசிய சபையின் சபாநாயகர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் கலந்தாலோசித்து திகதிகள் நிர்ணயிக்கப்பட்டன.

அதற்கமையவே கொரிய தேசிய சபையின் சபாநாயகர் 3 நாள் விஜயம் மேற்கொண்டு ஜனவரி 18 ஆந்  திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இரு நாடுகளினதும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில்  இந்த விஜயம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.