(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியனைத் தீர்மானிக்கும் இரண்டு போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலும் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலிலும் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஏககாலத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அங்குரார்ப்பண சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் களுத்துறை புளூ ஸ்டார் கழகமா அல்லது கலம்போ எவ்சி கழகமா சம்பியன் என்பதைத் தீர்மானிக்கும் போட்டிகளே இன்று நடைபெறவுள்ளன.

அணிகள் நிலையில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் புளூ ஸ்டார், கடைநிலையில் உள்ள புளூ ஈக்ள்ஸை சுகததாச அரங்கில் சந்திக்கவுள்ளது.

இரண்டாம் இடத்திலுள்ள கலம்போ எவ்சியும் 4ஆம் இடத்திலுள்ள சீ ஹோக்ஸும் குதிரைப்பந்தயத் திடலில் மோதவுள்ளன.

நாளைய கடைசிக் கட்டப் போட்டியில் புளூ ஸ்டார் வெற்றிபெற்றால் அக் கழகம் சம்பியன் பட்டத்தை சூடிக்கொள்ளும்.

புளூ ஸ்டார் வெற்றிபெறாமல் கலம்போ எவ்சி வெற்றிபெற்றால் கலம்போ எவ்சிக்கு சம்பியன் பட்டம் சொந்தமாகும்.

புளூ ஸ்டார், கலம்போ எவ்சி ஆகிய இரண்டு அணிகளும் வெற்றிபெறத் தவறினாலும் புளூ ஸ்டாரே சம்பியனாகும். சீ ஹோக்ஸ் வெற்றிபெற்றால் இரண்டாம் இடத்துக்கு முன்னேறும்.

புளூ ஸ்டாரைப் பொறுத்த மட்டில் மிகத் திறமையாக விளையாடி வருவதுடன் கடைநிலையில் இருக்கும் புளூ ஈக்ள்ஸை இலகுவாக வெற்றிகொண்டு சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லீக் சுற்றில் கலம்போ எவ்சி, சீ ஹோக்ஸ் ஆகிய இரண்டு அணிகளையும் புளூ ஸ்டார் வெற்றிகொண்டிருப்பதால் இந்த 3 அணிகளும் சம புள்ளிகளைப் பெற்றாலும் நேருக்கு நேர் போட்டி முடிவுகளின் அடிப்படையில் புளூ ஸ்டார் சம்பியனாவது உறுதி.