2021.01.10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

01. புத்கமுவ கால்வாய் மழைக்காலங்களில் நிரம்பி வழிந்தோடுவதால், அழுத்தங்களுக்கு உள்ளாகும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கல்

மண்சரிவு அபாயம் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டம் தற்போது 14 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அதன்கீழ் 1558 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், மண்சரிவு அபாயம் இல்லாவிட்டாலும் கடலரிப்புக்கள், ஆற்றங்கரை அரிப்புக்கள், தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களால் தொடர்ந்தும் அழுத்தங்களுக்கு உள்ளாகும் குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்காக, அவ்வாறான குடும்பங்களையும் மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கிக் கொள்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை பிரதேச செயலகப் பிரிவில் 514 வெலிகட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள புத்கமுவ கால்வாய் மழைக்காலங்களில் நிரம்பி வழிந்தோடுவதால் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப்பெருக்கால் அழுத்தங்களுக்கு உள்ளாகும் 42 குடும்பங்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த 42 குடும்பங்கள் வசித்து வரும் இடங்களிலிருந்து அவர்களை அகற்றி நகர அபிவிருத்தி அதிகாரசபையால் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களில் 42 வீடுகளை  அக்குடும்பங்களுக்கு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளை மேம்படுத்துவதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளின் ஒத்துழைப்புக்களை மேலும் வலுவூட்டுவதற்காகவும் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 05 வருட காலத்தில் 2.89 பில்லியன் இலங்கை ரூபாய்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, இயலளவு விருத்தி, கலாசார விவகாரங்கள், தொல்லியல் ரீதியான ஒத்துழைப்புக்கள், இலங்கையில் புத்த பிரானின் வணக்கத்திற்குரிய புனித தந்ததாதுக்களை காட்சிப்படுத்தல் மற்றும் இந்தியாவுக்கான பௌத்த யாத்திரைகளை மேம்படுத்தல் போன்ற விடயங்களுக்கு ஏற்புடைய வகையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் இணைந்த அடையாளங் காணப்படும் கருத்திட்டங்களை இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று இல்லாத, வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு வசதிகளை வழங்கும் கருத்திட்டம்

வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று இல்லாமையால் வாடகை வீடுகளில் வாழ்கின்ற, உண்மையான வீட்டுத் தேவையுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தாங்குதகு விலைக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் 'சொந்துரு மஹல்' எனும் பெயரிலான வீடமைப்புத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 500,000/- ரூபாய்கள் ஆரம்பத் தொகையாகச் செலுத்துவதற்கான ஆற்றல் இருக்க வேண்டியதுடன், வீட்டுப் பெறுமதியின் எஞ்சிய தொகை வருடமொன்றில் தவணைக் கட்டணமாக அறவிடப்படும். தேவைக்கேற்ப வங்கியின் மூலம் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும், தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதற்கமைய, குறித்த வீடமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இவ்வேலைத்திட்டத்தின் முன்னோடிக் கருத்திட்டமாக தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான ரன்பொக்குனகமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 04. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்து அரசாங்கங்களுக்கிடையே சுகாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இருநாடுகளுக்கும் இடையில் சுகாதார துறையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரியும் சுகாதார சேவை தொழில்வாண்மையாளர்களின் உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட இருதரப்பினரும் உடன்படுகின்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய சங்கத்திலிருந்து பிரிந்த பின்னர் அந்நாட்டின் சுகாதாரத் துறையில் உருவாகி வரும் தொழில் வாய்ப்புக்களை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்கும் இதன்மூலம் இயலுமை கிட்டும். அதற்கமைய, குறித்த புரிந்துணர்வில் கையொப்பமிடுவதற்காக தொழில் உறவுகள் அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

05. இலங்கையின் கல்வி அமைச்சுக்கும், ஹங்கேரியாவின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூர் மாணவர்களுக்கான  ‘STEPENDIUM HUNGARCUM’  புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022-2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரதான 08 பட்டப் படிப்புக்களும், பட்டப்பின் படிப்புக்கள் 08 உம், 04 கலாநிதிப் பட்டப்படிப்புக்களை பயில்வதற்கான சந்தர்ப்பம் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கின்றது. அதற்கமைய, கல்வி அமைச்சுக்கும், ஹங்கேரியாவின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 06. வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியுடன் இணைத்து வேலிஓயா சீனி உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுதல்

இலங்கையில் வருடாந்தம் 600,000 மெட்ரிக்தொன் சீனித் தேவை காணப்படுகின்றது. அவற்றில் 85% வீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்காக வருடாந்தம் 45 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில் உள்ளூரில் 54,000 மெட்ரிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த தொகையை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, லங்கா சீனிக் கம்பனியின் கீழ் புதிய சீனித் தொழிற்சாலையொன்றை மொனராகலை மாவட்டத்தின் வேலிஓயா பிரதேசத்தை மையமாகக் கொண்டு புதிதாக நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 07. உள்ளூர் பயணங்கள் முகாமைத்துவக் கம்பனி, ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இணையவழி சுற்றுலாப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய ரீதியான மேம்பாட்டுப் பணிகளுக்காக சுற்றுலாத்துறையின் உதவித்திட்ட முன்மொழிவு

பெருந்தொற்று நிலைமையின் பின்னர் உள்ளூர் பயணங்கள் முகாமைத்துவக் கம்பனி, ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இணையவழி சுற்றுலாப் பிரதிநிதிகள் மேற்கொண்டு வரும் உலகளாவிய ரீதியான மேம்பாட்டுப் பணிகளுக்காக சுற்றுலாத்துறையின் உதவித்திட்ட முன்மொழிவொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணியகம் திட்டமிட்டுள்ளது. அதன்கீழ் 2022 ஆம் ஆண்டில் தகைமைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு 06 மாதகால உயர்ந்தபட்ச காலத்திற்குக் குறித்த சலுகையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. முன்மொழியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் நிதியின் கீழ் 400 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதற்கு அதன் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணித்துண்டை இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ளல்

ஹப்புத்தளை பொலிஸ் நிலையம் 1928 ஆம் ஆண்டு தொடக்கம் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான 01 ஏக்கர் 01 றூட் 9.8 பேர்ச்சர்ஸ்களில் அமைந்துள்ள புகையிரதப் பாதுகாப்பு வனப்பிரதேசக் காணியில் இயங்கி வருகின்றது. குறித்த பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியானது இதுவரைக்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு முறையாக ஒப்படைக்கப்படாமையால், பொலிஸ் நிலையத்திற்கு தேவையான புதிய கட்டிடங்களை அமைப்பதற்கோ அல்லது பணம் செலவிட்டு திருத்த வேலைகளைச் செய்வதற்கோ இயலாமலுள்ளது. அதனால், குறித்த காணித்துண்டை இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 09. நியாயமான விலையில் அரிசியை விநியோகிப்பதற்காக அரிசி இறக்குமதி செய்தல்

திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 200,000 மெட்ரிக்தொன் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக புசு  GR Short Grain Rice வகை அரிசி 100,000 மெட்ரிக் தொன்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. நெற் செய்கைக்காக உள்ளூர் சேதன உரத்தை கொள்வனவு செய்தல்

விவசாயப் பணிப்பாளர் நாயகம் அவர்களால், நெற்செய்கைக்காக தயாரிக்கப்படும் சுற்றாடல் நேயம்மிக்க உரத்திற்கான சிபார்சுகளை கருத்தில் கொண்டு, 2022 ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கைக்கு விவசாயிகளுக்கு உள்ளூர் சேதன உர விநியோத்திற்காக உரக் கொள்வனவுக்கான பெறுகை செயன்முறையை ஆரம்பிப்பதற்கும், 2022 ஆம் ஆண்டிற்கான உரமானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி, உள்ளூர் உற்பத்தியாளர்களால் உரிய தரநியமங்களுக்கமைய 2022 ஆண்டு சிறுபோக செய்கைக்கு விநியோகிக்கப்படவுள்ள சுற்றாடல் நேயம்மிக்க உள்ளூர் உரத்தை, இரண்டு அரச உரக் கம்பனிகள் மூலம் கொள்வனவு செய்வதற்கும் விவசாய அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 11. கால்நடை நலனோம்புகை சட்டமூலம்

கால்நடை நலனோம்புகை சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்காக 2020 ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

- அரசாங்க தகவல் திணைக்களம்