மேற்கிந்தியத் தீவுகளில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நேற்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி இலகுவாக வெற்றி பெற்றது.

கயானாவில் ஞாயிறன்று இரவு பெய்த மழை காரணமாக 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிப் போட்டியில் அயர்லாந்தை 128 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.

இவ் வெற்றியில் ஷெவன் டெனியல் குவித்த அரைச்சதம் பெரும் பங்காற்றியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 43 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்களைக் குவித்தது.

ஷெவன் டெனியல் 72 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 75 ஓட்டங்களைக் குவித்து துடுப்பாட்டத்தில் இருந்து சுய ஓய்வு பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

இவரை விட ரனுத சோமரட்ன (33), பவன் பத்திராஜா (25), சதிஷ ராஜபக்ஷ (22) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை துடுப்பாட்டத்தில் வழங்கினர்.

அயர்லாந்து பந்துவீச்சில் நெதன் மெக்கயர் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 31.4 சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜொஷுவா கொக்ஸ் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை பந்துவீச்சில் வனுஜ சஹான் 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமிது விக்ரமசிங்க 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் இலங்கை இளையோர் அணிக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடன் ஒரு குழுவில் இலங்கை மோதவுள்ளது. 

- என்.வீ.ஏ.