(நா.தனுஜா)

நல்லாட்சி அரசாங்கத்தின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டிருக்காவிட்டால், இப்போது ஐக்கிய தேசியக்கட்சியின் தகுதிவாய்ந்த தலைவரொருவரால் நாடு ஆளப்பட்டிருக்கும். எதுஎவ்வாறெனினும் தற்போது பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கக்கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவே எதிர்க்கட்சித்தலைவராவார். 

ரணில் விக்ரமசிங்கவினாலோ அல்லது மைத்திரிபால சிறிசேனவினாலோ அதனை சவாலுக்குட்படுத்த முடியாது. இதுவிடயத்தில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு கனவுகள் இருக்கக்கூடும். 

ஆனால் அவையனைத்தும் ஒருபோதும் நனவாகாத கனவுகள் மாத்திரமே என்பதை அவர்கள் மனதிலிருத்திக்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தப் பதவிக்கு எவ்வாறு வந்தார் என்பதை மறந்துவிட்டு தற்போது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார். 

ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை அறிவித்தமை தவறானதொரு தீர்மானம் என்று ரணில் விக்ரமசிங்க அண்மையில் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். 

ஆனால் இதே விடயத்தைத்தான் நான் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகும்போது கூறினேன். அப்போது பலர் என்னை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள்.

குறிப்பாக பொதுவேட்பாளரொருவரை வெளியிலிருந்து களமிறக்கத்தேவையில்லை என்றும், மாறாக ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளிருந்தே தெரிவுசெய்யுமாறும் வலியுறுத்தியதுடன் ஜனாதிபதித்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்தால் ஐக்கிய தேசியக்கட்சி மிகமோசமான சீர்குலைவைச் சந்திக்கும் என்றும் எச்சரித்திருந்தேன். 

அதற்கேற்ப மிகவும் பழமையான ஐக்கிய தேசியக்கட்சி இப்போது முழுமையாகச் சீர்குலைந்திருப்பதுடன் அதன் உறுப்பினர்களில் ஒருவர்கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவாகமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. ஆனால் இப்போது சிலர் இவையனைத்தையும் மறந்துவிட்டுப் பேசுகின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூறவேண்டுமே தவிர, அவைகுறித்து தான் அறிந்திருக்கவில்லை என்று கூறமுடியாது. 

ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 12 அமைச்சர்கள் அங்கம்வகித்தார்கள். 

ஆகவே அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பின் அடிப்படையில் செயலாற்றவேண்டிய அவசியமும் மைத்திரிபால சிறிசேனவிற்கு இருக்கின்றது.

அதேபோன்று எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் காணப்படுவதுடன் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித்தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதனை சவாலுக்குட்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவினாலோ அல்லது மைத்திரிபால சிறிசேனவினாலோ முடியாது. 

ஒவ்வொருவருக்கும் பல்வேறு கனவுகள் இருக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் நனவாகாத வெறும் கனவுகள் மாத்திரமே என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

2015 இல் மைத்திரிபால சிறிசேனவைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருக்காவிட்டால், இப்போது ரணில் விக்ரமசிங்க இல்லாவிட்டாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிறிதொரு வேட்பாளரால் நாடு ஆளப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டார்.