கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Image

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து பங்களாதேஷுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1:1 என்ற கணக்கில் சமனிலையில் முடித்தது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மொமினுல் ஹக் தல‍ைமையிலான பங்களாதேஷ் அணி, ஐ.சி.சி. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இரு போட்டிகள் கொண்ட டெஸட் தொடரில் நியூஸிலாந்துடன் விளையாடி வருகிறது.

இதில் மவுன்ட் மௌங்கானுய் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பங்களாதேஷ், நியூஸிந்தை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்திருந்தது.

இந் நிலையில் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான போட்டி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் களத்தடுப்பினை தெரிவு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸுக்காக 128.5 ஓவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட் இழப்புக்கு 521 ஓட்டங்களை குவித்து டிக்ளயார்ட் செய்தது.

அணி சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் டோம் லெதம் 252 ஓட்டங்களையும், டெவோன் கான்வே 109 ஓட்டங்களையும், டாம் ப்ளண்டெல் 57 ஓட்டங்களையும் மற்றும் வில் யோங் 54 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷினால் முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடிந்தது.

பங்களாதேஷ் சார்பில் அதிகபடியாக யாசிர் அலி 55 ஓட்டங்களையும், நூருல் ஹசன் 41 ஓட்டங்களையும் பெற, ஏனைய வீரர்கள் டக்கவுட்டுடனும் ஒற்றை இலக்க ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் மற்றும் கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ் முடிவுகளின் அடிப்படையில் 395 ஓட்டங்களினால் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து பங்களாதேஷுக்கு பாலோ-ஒன் வழங்கியது.

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸினை ஆரம்பித்த பங்களாதேஷ் 79.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1:1 என்ற கணக்கில் சமனிலைப்படுத்தியது.

Image

லிட்டன் தாஸ் மாத்திரம் பங்களாதேஷுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சதம் விளாசினார் (102).

பந்து வீச்சில் கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும், டேரில் மிட்செல், ரொஸ் டெய்லர் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக டோம் லெதமும், தொடரின் ஆட்டநாயகனாக டெவோன் கான்வேயும் தெரிவானார்கள்.

Image