(நா.தனுஜா)
முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதியினால் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரை அப்பதவிக்கு நியமிக்கும் நோக்கிலேயே 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட வழக்கிலிருந்து அவரை முழுமையாக விடுவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டனவா என்ற சந்தேகம் தமக்குக் காணப்படுவதாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டில் பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு ட்ரயல் அட்பார் விசேட நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கில் 14 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிராக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதுமாத்திரமன்றி முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்குப் பதிலாக இலஞ்சம் பெறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாகக் குறிப்பிட்டு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோவினால் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி முறைப்பாடொன்றும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அம்முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக பிரிட்டோ பெர்னாண்டோ நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், ஆணைக்குழுவில் தான் கூறிய விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
'முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட கடந்த 2021 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியினால் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரை அப்பதவிக்கு நியமிப்பதற்காகவே 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட வழக்கிலிருந்து அவரை முழுமையாக விடுவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திட்டமிட்டு முன்னெடுத்தாரா என்ற சந்தேகம் தற்போது எமக்கு எழுந்திருப்பதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.
அதுமாத்திரமன்றி எதிர்வருங்காலங்களில் உயர்பதவிகளைப்பெறும் எதிர்பார்ப்பில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்குத் தீர்மானித்ததுடன் அவரை இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுவிப்பதற்கும் முயன்று வருகின்றாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் கூறினேன்' என்று தெரிவித்த பிரிட்டோ பெர்னாண்டோ, இவ்வழக்கில் வசந்த கரன்னாகொடவும் தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணைகளுக்காக மூவரடங்கிய விசேட நீதியரசர் குழாமும் நியமிக்கப்பட்டதன் பின்னர் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பது எந்தவகையில் ஏற்புடையது? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், பிரிட்டோ பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த அதே சந்தர்ப்பத்தில் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆணைக்குழுவிற்கு வெளியே அமைதிவழியிலான கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
'முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை வாபஸ் வாங்கிய சட்டமா அதிபரின் கேவலமான செயற்பாட்டைக் கண்டிக்கின்றோம்', 'நீதிமன்றத்திடமிருந்து எமக்கான நியாயத்தை எதிர்பார்க்கின்றோம்', 'சட்டம் இல்லாத இடத்தில் சட்டமா அதிபர் எதற்கு' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM