யாழ். கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதுடைய ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொக்குவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் முற்பகல் 11.30 மணியளவில் 28 வயதுடைய வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தபட்டது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது என ஆரம்ப விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை இருவர் மேற்கொண்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில் தெல்லிப்பழை பகுதியில் தலைமறைவாகியிருந்த இந்த சம்பவத்தின் முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.