(நா.தனுஜா)

நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் ஓரங்கமாக வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பில் நிறைவேற்றப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கி  ஐக்கிய இலங்கை வெளிநாட்டுப் பணியாளர்கள் சக்தியை உருவாக்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக 16 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டம் - ஐக்கிய  மக்கள் சக்தி | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கம் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னர் அதன் பிரசார நடவடிக்கைகளின்போதும் அதன் பின்னர் தேர்தல் வெற்றிக்காகவும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை நன்கு பயன்படுத்திக்கொண்டது. ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் வசிக்கின்ற மற்றும் பணிபுரிகின்ற இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைதந்தார்கள். 

எனினும் இன்றளவிலே அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் ஓரங்கமாக வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பில் நிறைவேற்றப்படவேண்டிய விடயங்களைத் தயாரிக்கும் பொறுப்பைக் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ என்னிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்படி சர்வதேச நாடுகள் பலவற்றிலும் வசிக்கின்ற மற்றும் பணிபுரிகின்ற இலங்கையர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் நாட்டிற்கான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ரீதியில் ஏனைய உதவி ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்துவதுடன் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும் விசேட அவதானம் செலுத்தப்படும். 

அதுமாத்திரமன்றி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டங்களை வகுத்தல் மற்றும் சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் கல்விக்கொள்கையை எமது நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு அறிமுகப்படுத்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கி ஐக்கிய இலங்கை வெளிநாட்டுப் பணியாளர்கள் சக்தியை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இதுவரையான காலமும் பெரும்பாலான அரசியல்கட்சிகள் வெளிநாடுகளில் வசிக்கின்ற மற்றும் பணிபுரிகின்ற இலங்கையர்களைத் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இருப்பினும் நாம் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இச்செயற்திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம். 

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகத் தம்மைப் பதிவுசெய்து வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிபவர்கள், வேறு தனிப்பட்ட வீசாக்களின் ஊடாக வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிபவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், நாட்டிற்கான பல்வேறு சேவை வழங்குனர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் இதில் உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

முதற்கட்டமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து எத்தனைபேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றார்கள்? அவர்கள் எந்தெந்த நாடுகளில் பணிபுரிகின்றார்கள்? என்னென்ன பணிகளில் ஈடுபடுகின்றார்கள்? என்ற விபரங்களைத் திரட்டவிருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை முக்கியத்துவம் வாய்ந்த பிரிவினராக அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் எமது நாட்டிற்குள் எவ்வித சிக்கல்களுமின்றி அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியவாறான சட்டவிதிமுறைகளையும் உருவாக்குவோம் என்று தெரிவித்தார்