மத்திய கிழக்கு வர்த்தக நிறுவனமான லுலு குழுமம் ஜம்மு - காஷ்மீரில் உணவு பதப்படுத்தும் ஆலையை அமைக்க 200 கோடி ரூபா முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

துபாயில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா முன்னிலையில் லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி எம்.ஏ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

'முதல் கட்டத்தில 200 கோடி ரூபா மற்றும் பின்னர் 200 கோடி ரூபா மேலும் விரிவாக்கம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டங்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு கணிசமான வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விவசாயத் துறை மற்றும் விவசாயிகளுக்கும் பெருமளவில் பயனளிக்கும் என்று நான் நம்புவதாக லுலு குழுமத்தின்  தலைவர்  தெரிவித்தார்.

ஸ்ரீ நகரில் தடையில்லா விநியோகத்திற்காக ஒரு தளவாட மையம் மற்றும்  சிறப்பு சந்தை  அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

வளைகுடா நாடுகளில் உள்ள அதன்  கிளைகள் முழுவதும் ஜம்மு – காஷ்மீரிலிருந்து ஆண்டுக்கு 500 கோடி மதிப்புள்ள குங்குமப்பூ, பாசுமதி அரிசி, அப்பிள், பாதாம், தேன், உலர் காளான் மற்றும் பருப்பு வகைகள் என்பன ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.