தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகவுள்ள 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லியிடமிருந்து சிறந்த ஆற்றல் வெளிப்பாட்டை இந்திய அணி எதிர்பார்த்துள்ளது.

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி | Dinakaran

ஜொஹானெஸ்பேர்கில் இந்தியா தோல்வி அடைந்த 2ஆவது டெஸ்டில் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்த கோஹ்லி, அணித் தலைவராக மீண்டும் விளையாடவுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத போதிலும் அணியை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட விராத் கோஹ்லியின் ஆக்ரோஷத்தன்மை கடைசிக் கட்டத்தில் இருக்கவில்லை.

அப் போட்டியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.

ஜொஹானெஸ்பேர்கில் பெய்த மழை காரணமாக ஆடுகளத்தின் எல்லைக் கோட்டுக்கு அருகே ஈரலிப்புத்தன்மை காணப்பட்டது. இது பந்தை பாதிக்கச் செய்ததாகவும் இதனால் பந்துவீச்சாளர்களுக்கு துல்லியமாக பந்துவீச முடியாமல் போனதாகவும் இந்திய பயிற்றுநர் ராகுல் ட்ராவிட் தெரிவித்தார்.

இந்தியா வெற்றிபெற்ற முதல் டெஸ்டில் சதம் குவித்த கே.எல். ராகுலை விஞ்சும் வகையில் துடுப்பாட்ட வீரர்கள் எவரும் 2ஆவது டெஸ்டில் பிரகாசிக்கத் தவறியமையும் இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.

நியூலண்ட்ஸ் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமையக் கூடியது என்பதால் 27 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ள விராத் கோஹ்லி, ஆடுகளத்தின் தன்மையை சாதகமாக்கிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கடந்த இரண்டு வருடங்களாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவந்துள்ள விராத் கோஹ்லி, தன் முன்னே உள்ள சவாலை வெற்றிகொள்ளும் வகையில் துடுப்பாட்டத்தில் அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முயற்சிப்பது அவசியமாகும்.

அத்துடன் அனுபவசாலிகளான சேத்தேஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே ஆகியோரிடம் இருந்தும் கணிசமான ஓட்டங்களை இந்திய அணி எதிர்பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது உபாதையினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மத் ஷமி போட்டிக்கு முன்னர் பூரண குணமடையாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் இறுதி அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்காவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அணித் தலைவர் டீன் எல்கர், 'சகலமும் எமக்கு சாதகமாக அமையப் போவதில்லை' என எச்சரித்துள்ளார்.

அனுபவம் குன்றிய துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு பலம் வாய்ந்ததாக தென்படவில்லை.

எனவே தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் முதல் தடவையாக இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவதைத் தவிர்ப்பதற்கு கடுமையாக முயற்சிக்கவேண்டிவரும்.