ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 02

Published By: Gayathri

10 Jan, 2022 | 12:48 PM
image

ஸ்ரீ ஸக்தி சுமனன்

’சாதாரணமான பதிபக்தியுள்ள ஒரு பெண் தனது கணவனின் ஆயுளை காலனிடமிருந்து மீட்டாள்’ என்ற மகாபாரதத்தின் உபகதை ஸ்ரீ அரவிந்தரிற்கு மனிதனின் உணர்வின், ஆன்மாவின் பயணமாக உன்னத சரித்திரமாகத் தெரிந்தது. 

ஸ்ரீ அரவிந்தர் இந்தக் காவியத்தை ஐம்பது ஆண்டுகளாக திருத்தி மீண்டும் மீண்டும் எழுதினார். அவர் ஒரு கவி; அதிலும் ஆங்கிலத்தில் அவர் புலமை என்பது ஒப்பற்றது. 

ஸாவித்ரியை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதியதற்கு அவர் ஒரு விளக்கமும் அருளியுள்ளார். தனது யோக அனுபவம் மேம்பட மேம்பட உணர்வு ஓர் உயர்ந்த நிலையை எட்டும் நிலையில் அந்த அனுபவங்களுக்கு ஏற்ற வகையில் கவிதைவரிகளை மாற்றி செம்மைப் படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

செம்மையாக்குதல் என்பதை பலரும் அதற்கு மேல் ஒன்றுமில்லாத மிக உயர்ந்த உச்ச நிலைக்குச் செல்லுதல்  என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் இதற்கு ஸ்ரீ அன்னை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். செம்மைப்படுத்தல் என்பது, குறித்த ஒன்று, உதாரணமாக கவிதை ஒன்று எழுதப்படும் போது அந்த சந்தர்ப்பத்தில் குறித்த ஒரு மனிதன் அந்த கவிதைக்காக தேர்ந்தெடுக்கும் வார்த்தை எப்படி அது விபரிக்கக் கூடிய அனைத்துக் காரணிகளையும் அடக்கிக்கொண்டு  அவற்றை வெளிப்படுத்துகிறது என்பதைப் பொறுத்து அதன் செம்மைத் தன்மை வரைவிலக்கணப்படுத்தலாம் என்கிறார்.

 

ஆகவே செம்மைத் தன்மை என்பது காலத்துடன், இயக்கத்துடன் மாறக்கூடியது. செம்மையுறுதல் என்பது ஒரு இயக்கவியல் கோட்பாடு. 

ஆகவே ஸ்ரீ அரவிந்தர் தான் எழுதுபவற்றை காலத்துடன் தனது உணர்வுத் தளம் உயர்வை எட்டும் போது அவற்றை தனது புதிய உணர்வுத் தளத்திற்கு ஏற்றவகையில் திருத்தியமைப்பதை எப்போதும் ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தார். 

ஆரம்பகாலத்தில் எழுதிய யோகசாதனம் என்ற ஆவியுலகத் தொடர்பு நூலை மீளப்பெற்று தனது எழுத்தாகக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவித்திருந்தார். 

இதனால் ஸ்ரீ அரவிந்தர் உடலைத் துறக்கும் தனது இறுதி நாள்வரை ஸாவித்ரி காவியத்தினை எழுதிச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்தார். 

வேத ரிஷிகள் மந்திரங்கள் எனக்கூறப்படுபவை இத்தகைய தன்மை வாய்ந்தவை. சாதாரணமாக மனிதன் தனது அந்தக்கரணங்கள் என்று சொல்லப்படும் மனம், புத்தி, சித்தம், ஆங்காரத்திற்குள் சேர்த்துக்கொண்ட சொற்களை மற்றும் தான் நினைப்பதை வெளிப்படுத்த கோர்த்துச் சொல்வதையே சொற்கள் என்று கூறுகிறோம். 

ஆனால் மந்திரங்கள் ஒரு ரிஷி தனது மனதின் விருத்திகளை நிரோதம் செய்து விட்டு பிரபஞ்சத்தினை ஏற்கும் நிலையில் இருக்கும்போது அவருடைய உணர்வு குறித்த உயர்ந்த தளத்தினை அடைந்த அனுபவம் மீண்டும் உடலிற்கு வரும்போது விசுத்திச் சக்கரத்தினைத் தூண்டுவதால் வெளிப்படும் சொற்களே மந்திரங்கள் எனப்படுகின்றன. 

ஸ்ரீ அரவிந்தர் தனது யோகசாதனையில் பெற்ற இத்தகைய அனுபவங்களை தனது ஸாவித்ரி காவியத்தினூடாக கொண்டுவந்தார். 

இப்படிப் பெறப்படும் மந்திரங்களை மீண்டும் மீண்டும் மனதில் இயக்குவதன் மூலம் ஒரு சாதகன் அந்த ரிஷி பெற்ற அனுபவப்பாதைகளைக் கடந்து அதே அனுபவத்தைப் பெறமுடியும். 

இதனால்தான் ஸ்ரீ அரவிந்தர் ’எதிர்கால கவித்துவம்’ என்ற நூலில் கவிதைகள் இப்படிப்பட்ட மந்திரத்தன்மை உடையவையாக படைக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை முன்வைக்கிறார். 

இப்படி உயர் உணர்வினை அடைந்த கவிகளின் கவிதைகளைப் படிக்கும் அனைவரும் தொடர்ச்சியாக மனதின் மூலம் இந்த உயர்தளத்தை அடையலாம் என்பது இதன் உத்திகளில் ஒன்று. இந்த முயற்சியின் அதி உன்னத வெளிப்பாடே சாவித்ரி காவியம். 

(தொடரும்….)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்