சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மீண்டும் வெளியானது குறித்து இலங்கையை சேர்ந்த இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

அதில் 'இந்த நாடும் அதன் மக்களும் எப்போதும் எனக்கு மிகுந்த அன்பையும் மரியாதையையும் அளித்துள்ளனர். இதில் எனது ஊடக நண்பர்களும் அடங்குவர், அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் தற்போது கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன். ஆனால் எனது நண்பர்களும் ரசிகர்களும் என்னைக் கைவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். 

இந்த நம்பிக்கையுடன் எனது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடும் இயல்புடைய படங்களை பரப்ப வேண்டாம் என்று எனது ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் இதைச் செய்ய மாட்டீர்கள், எனக்கும் இதைச் செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீதியும் நல்லறிவும் வெல்லும் என்று நம்புகிறேன்.  நன்றி' என குறிப்பிட்டுள்ளார். 

பெங்களூரை சார்ந்த சுகேஷ் சந்திரசேகர் எனும் நபர் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களை ஏமாற்றியும், பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டில்லி பொருளாதார குற்றவியல் பொலிஸார் மற்றொரு வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். 

சில நாட்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் என கூறியிருந்தார். இதை ஜாக்குலின் வழக்கறிஞர் மறுத்திருந்தார். 

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் படுக்கையறையில் முத்தம் கொடுக்கும் செல்பி புகைப்படம் வெளியாகி இந்தி திரையுலகில் வைரலானது.

ஜாக்குலினும் சுகேஷும் நான்கு முறை சென்னையில் சந்தித்துள்ளனர். இதற்காக தனி விமானத்தை சுகேஷ், அவருக்கு ஏற்பாடு செய்ததாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் இன்னும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இவற்றுக்கு விளக்கம் தரும் வகையில் ஜாக்குலின் ஒரு பதிவிட்டுள்ளார்.