திருகோணமலை  கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு டிப்பர் வாகனமொன்று மோதியதில்  ஒருவர் பலியாகியுள்ள நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் பேராறு பகுதியில் தனது காணிக்குள் மண் இட்டு செப்பனிட்டு வந்துள்ளார். இவ் வேளையில்  உடைந்த கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று காணிக்குள் களி மண்ணை கொட்டுவதற்காக பின்பக்கமாக செலுத்திய போது குறித்த நபர் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்து, தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.