பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமொன்றில் ஞாயிற்றுக்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Smoke rises after a fire broke out at a Rohingya refugee camp in Bangladesh's southern district of Cox's Bazar on January 9, 2022.

இதனால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் எல்லை மாவட்டமான காக்ஸ் பஜாரில் அமைந்துள்ள அகதிகள் முகாமின் ஒரு பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்கள் 2017 ஆம் ஆண்டு மியான்மரில் இராணுவம் தலைமையிலான ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடி வந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஆவர்.

எவ்வாறெனினும் அவசரகால பணியாளர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அகதிகளுக்கு பொறுப்பான பங்களாதேஷ் அரசு அதிகாரி மொஹமட் ஷம்சுத் தௌசா தெரிவித்தார். 

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

காக்ஸ் பஜாரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 10,000 க்கும் மேற்பட்டோரின்  குடிசைகளை எரிந்து நாசமாகியமையும் குறிப்பிடத்தக்கது.