'சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

May be an image of 1 person, standing, flower and text that says '建交65周年暨《米胶 米胶协定》 斯友谊杯帆船赛 签署70周年 签署 年1月9日, 科伦坡港口城'

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இறப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

May be an image of 5 people and people standing

இந்நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடக் கூடியதுடன், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு முன்னால் இதற்கான தற்காலிக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையின் நிறைவில் வளைவான வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோக தொங்கு பாலம் வரை பொதுமக்கள் பயணிக்கக்கூடியதுடன், தினமும் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 6.00 மணிவரை அங்கு தங்கியிருக்கலாம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 'இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி' இதன் ஒரு அங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

May be an image of 1 person, nature and body of water

May be an image of boat racing and outdoors

May be an image of 9 people, people boat racing and sailboat

இலங்கைக்கான சீன தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ யினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இதன்போது 65 எனக் குறிப்பிடப்பட்ட 'இலங்கை-சீன நட்புறவு படகோட்டப் போட்டி'க்கான நினைவு டீ-சேர்ட் ஒன்றினை வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீக்கு பரிசளித்தார்.

May be an image of 2 people and people standing

கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விளையாட்டுத்திறன் இணைக்கப்பட்டமை இருநாட்டு பிரதிநிதிகளதும் பாராட்டிற்கு உட்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை அன்புடன் வரவேற்கிறேன். அவரை எங்களின் மிக நெருங்கிய நண்பராக வரவேற்கிறோம். வரலாற்று ரீதியாக இலங்கையர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு அரசின் பிரதிநிதியாகவும் அவரை நாங்கள் வரவேற்கிறோம்.

நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே சீன அரசாங்கம் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்ததாக சாட்சிகள் உள்ளன. 

உங்கள் நாட்டிலிருந்து புனித யாத்திரைக்கு வந்த ஃபாஹியன் துறவி பதித்த பதிவுகள் இன்றும் நம் வரலாற்றின் வண்ணமயமான பகுதியாகும். அன்று பாஹியன் துறவி மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் எமது நாட்டுக்கு வந்ததைப் போன்று இன்றும் சீன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு வருகின்றனர்.

சீனா நமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை. அதனால் நமது நாடுகள் எப்போதுமே மிகவும் சாதகமான கொடுக்கல்வாங்கல்களை செய்துகொண்டிருக்கின்றன. 

அன்று ஏற்படுத்தப்பட்ட இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தை நம்மவர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். 'எமது இரப்பர் உங்களிடமிருந்து அரிசி'. அதேபோன்று இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி மிகவும் மதிப்புமிக்க செய்தியை அனுப்பினார்.

'உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீங்களே உற்பத்தி செய்துக் கொள்ளுங்கள். அது சுதந்திரத்திற்கான வழி.'

நாம் அப்பாதையைக் கடைப்பிடித்தோம். இன்று உங்கள் நாடும் முழு உலகமும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

கொரோனா தொற்றால் அது தடைப்பட்ட போதிலும், முழு உலகிற்கு ஒரு முக்கிய முன்மாதிரியாக விளங்கவே முயற்சித்தோம்.

சௌசன்லாய் ஆரம்பித்த அணிசேரா கொள்கையை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். அந்தக் கொள்கை நம்மைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் பலமாக இருந்தது.

அதேபோன்று 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் பிரேரணையை முன்வைத்த காலமும் எனக்கு நினைவிருக்கிறது. பெரிய வல்லரசாக சீன அரசு எங்களுக்காக முன்நின்றது. அது எமது நாடு போன்று ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்காக சீனா செய்த மாபெரும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.

உங்கள் நாடு கெரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்நேரத்தில் ஒரு சீன பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நம் நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டும் என நம் நாட்டு மக்கள் நட்புடன் பிரார்த்தித்தனர். உங்கள் நாடு கொரோனா தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. விரைவில் தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு தைரியம் அளித்தனர். முதல் சுற்றிலேயே உங்கள் சீன தடுப்பூசியை நாங்கள் நம்பியிருந்தோம்.

அந்தத் தருணத்தில் எமது ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எமது சார்பாக செய்த தியாகம் எமது மக்களுக்கு பெரும் பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

அத்தகைய நண்பரின் எதிர்கால வளர்ச்சி குறித்து நாம் மகிழ்ச்சியுடன் பார்த்திருக்கின்றோம். சீன அரசாங்கமானது எமக்கு போன்றே உலகிற்கு அந்நாடுகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து உதவி செய்கிறது. நிபந்தனைகளை விதித்து தலையிடும் கொள்கை சீனாவிடம் இல்லை. எங்களைப் போன்ற நாடுகள் அத்தகைய கொள்கையையே எதிர்பார்க்கின்றன.

எனவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு நாங்கள் பெருமையுடன் வாழ்த்துகிறோம். “Belt and road” என்ற எண்ணக்கரு நமது நட்பை மேலும் மேம்படுத்தும். 

வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களே, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாம் அண்மையில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட்டோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

அத்துடன், இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காகவே துறைமுக நகரமொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம்.

இதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெற்ற ஒத்துழைப்பை நினைவுகூர்வதுடன், சீன அரசாங்கத்துடனான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உங்கள் வருகையை நாம் காண்கிறோம் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் சீ தொலவத்த, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன வர்த்தக பிரதி அமைச்சர் க்வான் கெமின், உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் வு ஜின்ஹொங், இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட சீன பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

May be an image of 7 people, people sitting and people standing