(எம்.மனோசித்ரா)
நாடு வங்குரோத்து நிலைமையை அடைய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாட்டை அபிவிருத்தி செய்வோம் என மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , நிவாரணம் வழங்கும் வரை கேள்வியெழுப்பிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி அவற்றை வழங்கியவுடன் அதனை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மாவத்தகம நீர் வழங்கல் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எமது அரசாங்கம் நியாயமானதாகும். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் மத, இன பிளவுகளை விதைக்கும் அரசாங்கம் அல்ல. இன, மத பிளவுகளை விதைப்பதாக எதிர்க்கட்சிகள் எம்மை அவதூறு செய்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாய் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.
மூன்று கட்ட தடுப்பூசிகளையும் வெற்றிகரமாக ஏற்றி, கொவிட் தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம் பெறுவார்.
நம் அயல் நாட்டில் மக்கள் நின்ற நிலையில் இறப்பதைக் கண்டோம். அதே போன்று இலங்கை மக்களும் ஒட்சிசன் இன்றியும் , சிகிச்சைக்காக படுக்கைகள் இன்றியும் மக்கள் இறந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டது.
மேலும் கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் சுமார் 200,000 மக்கள் மரணிப்பார்கள் என்று எதிர்க்கட்சி கணித்து கூறியது. தடுப்பூசியை கொள்வனவு செய்த போது , தடுப்பூசி போட வேண்டாம் என்று கூறினார்கள்.
தடுப்பூசி போடப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிடுவார்கள் என்றும் கூறினார்கள். தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
மக்களிடம் இவற்றை கூறிய தலைவர்கள் இரகசியமாக சென்று தடுப்பூசி ஏற்றிக் கொண்டனர். கொவிட் தொற்று நிலைமையின் போது, தங்களுக்கு வாக்களித்த மக்களை முடிந்தவரை வீதிக்கு இறங்கி, தொற்றை பரப்பி , அவர்களின் சடலங்களின் மீது அரசியல் அதிகாரத்தைப் பெற எதிர்க்கட்சி செயற்பட்டது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் நாம் நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்வோம். நாடு வங்குரோத்து நிலைமையை அடைய இடமளிக்க மாட்டோம். டொலர்கள் இல்லாமல் நாடு வங்குரோத்து நிலைமையை அடையும் என்று , 15 ஆம் திகதிக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்க்கட்சி எதிர்பார்க்கிறது. இவை தற்காலிகமான பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகள் இலங்கையை மட்டுமல்ல, உலகின் மற்ற நாடுகளையும் பாதித்துள்ளன.
ஊழலற்ற நாட்டை ஆட்சி செய்ய ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நாட்டை கட்டி எழுப்பி வருகிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிகள் கிறீஸ் பிசாசுகளை உருவாக்கினார்கள். பாராளுமன்றம் தனது அதிகாரத்தை இழந்துள்ளது என்றும் , ஆளும் தரப்பில் 40 உறுப்பினர்கள் எதிர்தரப்பினருடன் இணையவுள்ளனர் என்றும் எதிர்க்கட்சி கூறிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கூறுபவர்களை பொருட்படுத்துவதில்லை. நாட்டை அபிவிருத்தி செய்வோம் என மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
உலகம் முழுவதையும் பாதித்த கொவிட் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினோம். வெற்றிகரமான தடுப்பூசிகள் மூலம் நாம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளை விட முன்னணியில் இருக்கிறோம்.
தயக்கத்துடன் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியதாயிற்று. அரசாங்கத்தில் எவரும் இதனை விரும்பவில்லை. புத்தாண்டில் மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து நாங்கள் இவற்றைச் செய்தோம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. நிவாரணம் வழங்கப்படும் வரை, வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணம் எங்கே என்று வினவினார்கள்.
நிவாரணம் வழங்கப்படும் போது பியகமவில் உள்ள தொழிற்சாலையில் அச்சடித்து வழங்குவதாக விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் போது எதிர்க்கட்சிகளின் உள்ளத்தில் உள்ள கபட எண்ணம் வெளியே வருகிறது. எதிர்க்கட்சிகள் முயன்றாலும் மக்கள் வீழ்ந்து விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM