நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதல் மனைவியை கொன்று, துண்டு, துண்டாக வெட்டி பயணப்பையில் அடைத்து வனப்பகுதியில் வீசி சென்ற வைத்தியரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தினால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திராவின் தர்மவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுப் பெற்ற கூட்டுறவு வங்கி அதிகாரியான நட்டய்யன் என்பவரின் 4 ஆவது மகள் வினிதா (28 ) சித்தூர் மாவட்டம், கலிகிரியைச் சேர்ந்த சுதீர்குமார் பாபுவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். 

சுதீர்குமார் நெல்லூர் அரவிந்த் நகரில் மனைவி வினிதாவுடன் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 

இந்நிலையில் வினிதாவின் நடத்தையில்  கடந்த சில மாதங்களாக சுதீர்குமார் பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சுதீர்குமார், வினிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், தனது மாமனார் நட்டய்யனுக்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு, வினிதாவுக்கும், தனக்கும் ஏற்பட்ட தகராறில் வினிதாவை கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு அழைப்பினை துண்டித்துள்ளார்.  

இதனால் பதற்றமடைந்த நட்டய்யன், வினிதாவுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார். ஆனால் வினிதா தொலைபேசி அழைப்பினை எடுக்காததால், உடனடியாக  அவசர பொலிஸ் உதவியிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் பொலிஸ் அதிகாரிகள் வினிதாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாததால், சுதீர்குமாரை தேடி வந்தனர். 

இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி நெல்லூரில்  தலைமறைவாக இருந்தநிலையில் சுதீர்குமாரை கைதுசெய்து விசாரித்தனர். 

அப்போது, பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: மனைவி வினிதா மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்து, சடலத்தை துண்டுகளாக வெட்டி பயணப்பையில் அடைத்து முச்சக்கரவண்டியில் எடுத்துக்கொண்டு நெல்லூர் பஸ் நிலையம் கொண்டு சென்றேன். பின்னர், திருப்பதிக்கு பஸ் இல் கொண்டு சென்று, அங்கிருந்து ஒரு முச்சக்கரவண்டியில் சடலத்தை எடுத்துக்கொண்டு சந்திரிகிரி மண்டலம் பாக்ராபேட்டை அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று சுமார் 20 அடி பள்ளத்தில்  வீசிவிட்டு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாக்ராபேட்டை வனப்பகுதிக்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த வினிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, சடலத்தை நெல்லூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.