(எம்.மனோசித்ரா)
சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இதுவரையிலும் விசாரணைகளை ஆரம்பிக்காமலிருப்பது ஏன்? நிதி அமைச்சர் அல்லது ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவா லிட்ரோ நிறுவன பிரதிநிதிகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பிக்க முடியாமலுள்ளது? என்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு அரசியல் அழுத்தங்கள் எவையும் இன்றி அவர்களை சுயாதீனமாக செயற்படுவதற்கு வாய்ப்பளித்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் இரசாயன கலவை உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையை நாம் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போது மக்களை அச்சமடையச் செய்வதற்காக அவ்வாறு கூறுவதாகத் தெரிவித்தனர்.
ஆனால் பொலிஸ் தரவுகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு கசிவினால் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பல சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. இன்றும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நாம் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளோம். இது போன்று பல தரப்பினராலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு , ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையிலும் இரசாயன பதார்த்த உள்ளடக்கத்தில் காணப்பட்ட மாற்றமே வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் என்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அனுமதியும் இன்றி லிட்ரோ நிறுவனம் இவ்வாறு உள்ளடக்கத்தில் மாற்றங்களை செய்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
விசாரணைகள் முன்னெடுக்கப்படாமைக்கான காரணம் குறித்து நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வினவிய போது , விசாhரணைகள் எந்த கோணத்தில் ஆரம்பிப்பது என்பது குறித்து ஆராய்வதாகக் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து இது குறித்த சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரியுள்ள போதிலும் , இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறினர்.
பின்னர் லிட்ரோ நிறுவன பிரதிநிதகளிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , எனினும் இதுவரையில் அவர்கள் எவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை என்றும் கூறப்பட்டது.
அருட்தந்தை சிறில் காமினி விவகாரத்திலும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நள்ளிரவில் சென்று கைது செய்த சந்தர்ப்பத்திலும் , ஜனாதிபதி தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டவர்களை கைது செய்த சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் காண்பித்த விவேகத்தினை ஏன் இந்த விடயத்தில் செயற்படுத்தாமலுள்ளது?
நிதி அமைச்சர் அல்லது ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவா லிட்ரோ நிறுவன பிரதிநிதிகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பிக்க முடியாமலுள்ளது? காரணம் இந்த அதிகாரிகளை நிதி அமைச்சரும் , ஜனாதிபதியுமே நியமித்தனர்.
அவ்வாறெனில் அரசியல் அனுமதியுடன் தான் சமையல் எரிவாயுவின் இரசாயன பதார்த்த உள்ளடக்கத்தில் மாற்றங்களை செய்ய லிட்ரோ நிறுவனத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனரா? இந்த அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து , அவர்களை கைது செய்தால் இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும்.
லிட்ரோ நிறுவனத்தினருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு அரசியல் அழுத்தங்கள் எவையும் இன்றி அவர்களை சுயாதீனமாக செயற்படுவதற்கு வாய்ப்பளித்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM