எம்மில் சிலர் பிறக்கும் போது வழமைக்கு மாறாக குறுகிய கால்கள் மற்றும் குறுகிய உயரத்தை கொண்டிருப்பர். இத்தகைய பாதிப்பை மெட்டாஃபிஷல் காண்ட்ரோடிஸ்ப்ளாசியா என்றும், கார்ட்டிலேஜ்- ஹெயர் ஹைப்போப்ளாசியா என்றும் மருத்துவத் துறையினர் குறிப்பிடுவர். இதற்கு பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சத்திரசிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்களின் கைகள் மற்றும் கால்களில் உள்ள நீண்ட எலும்புகளின் முனைகளுக்கு அருகிலுள்ள குருத்தெலும்புகள் மற்றும் அதன் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக எலும்பின் தொடர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் சிலருக்கு அவர்களின் முழங்கை மூட்டுகளை முழுமையாக இயக்குவதிலும் சிரமம் ஏற்படக் கூடும்.

பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அவர்களின் தலைமுடியின் வளர்ச்சியிலும் சமச்சீரற்ற தன்மை காணப்படும். அதன் நிறத்திலும் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக இவர்களின் தோல் பகுதி, நகங்கள், பற்கள் போன்றவை அசாதாரணமான தோற்றத்துடன் வளரக்கூடும்.‌ கழுத்துப்பகுதி உறுதியற்ற தன்மையுடன் இருப்பதால் அதனை பயன்படுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்ள நேரிடும். சிலருக்கு இடுப்பு பகுதியில் டிஸ்லோக்கேஷன் எனப்படும் பாதிப்பு ஏற்படும்.

இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் ரத்த சோகை பாதிப்பு ஏற்படும் சிலருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.

குருத்தெலும்பில் நோயெதிர்ப்பு குறைபாட்டின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு சத்திர சிகிச்சை மூலம் நிவாரணத்தை வழங்குவார்கள். மேலும் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்பதால் மருத்துவர்களின் எச்சரிக்கையையும் வழிகாட்டலையும் உறுதியாக கடைப்பிடிப்பதுடன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

டொக்டர் ரமேஷ் பாபு

தொகுப்பு அனுஷா