பாடசாலை மாணவன் ஒருவன் கொய்யா பழம் பறிக்க சென்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை சென்ரெகுலஸ் தோட்டத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சிறுவன் கொய்யா பழத்தை பறிக்க மரத்தில் ஏறியபோது கொய்யா மரம் சரிந்து விழுந்ததில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகளின் உதவியோடு சிறுவனை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 8இல் கல்வி பயிலும் 13 வயதுடைய குனசீலன் அபிலாஷன் என தெரியவந்துள்ளது.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)