(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் இறக்குமதியின் போது பாரிய டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் மின்சார சபைக்கு தொடர்ந்து கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க முடியாது.

டொலர் பிரச்சினைக்கான தீர்வினை மின்சாரத்துறை அமைச்சு காண வேண்டும்.பிறிதொரு அமைச்சின் நிதி நெருக்கடியினை எம்மால் தொடர்ந்து ஏற்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யும் போது எதிர்;க்கொண்டுள்ள டொலர் நெருக்கடியினை வலு சக்தி துறை அமைச்சும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் ஒவ்வொரு முறையும் முகாமைத்துவம் செய்கிறது.

3 நாட்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வனவு செய்வதற்கு 25 மில்லியன் டொலர் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. டொலர் திரட்டிக் கொள்வதற்கு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளோம்.

இலங்கை மின்சார சபைக்கு தொடர்ந்து எம்மால் கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க முடியாது.மின்சார சபை தமக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர் திரட்டிக் கொடுத்தால் தடையில்லாமல் எரிபொருளை வழங்க முடியும்.

மின்சாரத்துறை அமைச்சினை காட்டிலும் வலுசக்தி துறை அமைச்சு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.

டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் வலு சக்தி அமைச்சு மின்சாரத்துறை அமைச்சுக்கும் டொலர் திரட்டிக் கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.இது எவ்வாறாயின் பிச்சை எடுப்பவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வறுமை நிலைமையில் உள்ளவரிடம் ஒப்படைத்ததற்கு இணையான செயற்பாடாக காணப்படுகிறது.

மின்சாரத்துறை அமைச்சுக்கு எதிர்வரும் மாதம் முதல் கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க முடியாது என்பதை கவலையுடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.பிறிதொரு அமைச்சின் நிதி நெருக்கடியினை எம்மால் முகாமைத்துவம் செய்ய முடியாது என்றார்.