(இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தின் 99 எண்ணெய் குதங்களை 2003ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் போது போராட்டத்தில் ஈடுப்படாதவர்கள்  99 எண்ணெய் தாங்கிகளில் 85 தாங்கிகளை இலங்கை வசமாக்கும் போது தற்போது போராட்டத்தில் ஈடுப்படுவது வேடிக்கையானது.

தொழிற்சங்கத்தினர் இலங்கை மீது பற்றுக் கொண்டுள்ளார்களா அல்லது இந்தியா மீது பற்றுக் கொண்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது என வலுசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தித்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் புதிதாக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் பல தரப்பினர் அநாவசியமான எதிர்ப்பினை முன்வைத்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தின் 99 எண்ணெய் குதங்கள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரும் போது எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாகவுள்ளது.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து இன்று வரை பாவிக்க முடியாத நிலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வதற்காக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள போதும் அதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது கவலைக்குரியது இது தேசப்பற்றா அல்லது இந்நிய பற்றா என்பது சந்தேகத்திற்குரியது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் குறித்து தற்போது அரசியல்வாதிகளும்,தொழிற்சங்கத்தினரும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை கடந்த காலங்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளோம்.

இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 14 எண்ணெய் குதங்கள் இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் இலங்கை வசமாகவுள்ள நிலையில் மீண்டும் இந்திய நிறுவனத்திற்கு 50 வருடகாலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினரும்,எதிர்க்கட்சினரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் 2003ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்துடன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் 14 எண்ணெய் தாங்கிகள் இன்னும் இரண்டு வருடகாலத்தில் இலங்கை வசமாகவுள்ளது என கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் எவ்விடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பாராளுமன்றில் வைத்து சவால்விடுத்தேன்.இதுவரையில் அவர்கள் அச்சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை.

2003ஆம் ஆண்டு 99 எண்ணெய் தாங்கிகளும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளேன்.தேசிய வளங்களை பாதுகாப்பதற்கான அமைப்பினர் எதிர்வரும் வாரம் போராட்டத்தில் ஈடுப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு முன்னர் என்னை சந்தித்தால் கைச்hத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து தெளிவுப்படுத்துவேன்.

திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலை தொடர்பில் புதிதாக கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஊடாக இந்திய கடற்படை திருகோணமலை துறைமுகம் ஊடாக நாட்டுக்குள் வருகை தர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிறிதொரு பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 வருடகாலமாக 99 எண்ணெய் குதங்களும் இந்தியாவின் வசமே இருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய கடற்படை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்குள் வருகை தரவில்லை.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 61 எண்ணெய் குதங்கள் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டு அதன் உச்சபயனை இலங்கை முழுமையாக பெற்றுக் கொள்ளும் என்றார்.