(இராஜதுரை ஹஷான்)

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன என்ற உடன் அப்பம் கதை தான் நினைவிற்கு வருகிறது. அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது என்றால் சுதந்திர கட்சியினர் தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்.

அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டாம் என எவரும் எவரையும் தடுக்கவில்லை என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் 8 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரபல்யமடைய முயற்சிக்கிறார். அவரது கருத்துக்களை கேட்கும் போது அப்பம் கதை தான் நினைவிற்கு வருகிறது.

2015 ஆம் ஆண்டு எம்முடன் ஒன்றாக இருந்து அப்பம் உண்டு அடுத்த நாள் காலை ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றினைந்ததை ஒருபோதும் மறக்க முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியில் ஒன்றினைந்துள்ள பங்காளி கட்சிகள் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். கூட்டணியில் உள்ள சகோதர கட்சிகள் அரசாங்கத்துடன் இணக்கமாகவே செயற்படுகின்றன.

அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது என்றால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் உள்ளிட்ட அவரது தரப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அரச வரப்பிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம் எவரையும் எவரும் தடுக்கவில்லை. அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றது.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து வெளியேற தனக்கு விருப்பமானவர் பக்கம் செல்லலாம்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்யும் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அரச நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்றார்.