(எம்.எப்.எம்.பஸீர்)

போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 107 பேர் 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் அவற்றை தள்ளுபடி செய்து தம்மை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில்  முன் விக்கப்பட்டிருந்த வாதம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சத்துரிகா டி அல்விஸ், குறித்த வாதத்தின் அடிப்படையிலான கோரிக்கையை நிராகரிப்பதாக இன்று அறிவித்தார்.

கடந்த 2021 நவம்பர் 29 ஆம் திகதி, குறித்த வழக்குகளை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதங்களை முன் வைத்திருந்தார். இதன்போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் இன்று நீதிமன்றம் தனது  உத்தரவை  அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.

அதன்படியே இன்று நீதிமன்ற உத்தரவை அறிவித்த மேலதிக மாவட்ட நீதிபதி சத்துரிகா டி அல்விஸ்,  பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைகளை நிராகரிப்பதாக அறிவித்தார்.