(எம்.மனோசித்ரா)

சலுகைப் பொதிகளையும் பணத்தையும்  அரசாங்கம் வழங்குகின்றது என்பதற்காக அனைத்தையும்  பிரச்சினைகளும் முடிந்து விட்டதாக மக்கள் எண்ணிவிடக் கூடாது. 

இதனால் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க , 2023 இல் உரம் , பால்மா தட்டுப்பாடு அற்ற சமூகத்தையும் , சீரழிந்து கொண்டிருக்கும் நாட்டை கட்டியெழுப்பும்  சமூகத்தையும் , நாணயத்தாள்களை வரையறையின்றி அச்சிடும் வழிமுறையை இல்லாதொழித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு , டொலர் இருப்பை அதிகரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார் என்றும்  வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரிக்கப் போவதில்லை. பால்மா விலையோ அல்லது சமையல் எரிவாயு விலையோ குறைவடையப் போவதுமில்லை , விவசாயத்திற்கு தேவையான உரம் கிடைக்கப் போவதுமில்லை. டொலர் இல்லையெனில் மருந்து, பால்மா மற்றும் உரம் உள்ளிட்ட எதையும் இறக்குமதி செய்ய முடியாது.

எனவே சலுகை பொதிகளை வழங்கியமையால் பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக பாதக நிலைமைகளை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளனர். 

இதுவரையில் 400 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதுபோன்று பணத்தை அச்சிடுவதால் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. 

கைககளில் இவ்வாறு அச்சிடப்படும் பணம் காணப்பட்டாலும் சித்திரைப் புத்தாண்டின் போது அரிசியின் விலை 250 ரூபா வரை அதிகரிக்கக் கூடும்.

இதே நிலைமையில் தொடர்ந்தும் பயணித்தால் நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்படும். அரச அதிகாரிகளை பதவி நீக்குவதால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண முடியாது. 

காரணம் அவர்களால் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த மாத்திரமே முடியும். அதே போன்று அமைச்சர்களை பதவி நீக்கி அவர்களை அச்சுறுத்துவதன் மூலமும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரம் போதாது. அதற்கு சிறந்த அரசியல் தலைமைத்துவமும் அத்தியாவசியமானதாகும். இவை இரண்டு ஐக்கிய தேசிய கட்சியிடம் மாத்திரமே காணப்படுகின்றன. 

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்த பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை வழங்கக் கூடிய சிறந்த தலைவராவார். எது எவ்வாறிருப்பினும் அமைச்சர்களின் பதவி நீக்கத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று எந்த நாடும் வீழ்ச்சியடைந்ததில்லை. 

கடந்த 73 ஆண்டுகளுக்குள் 16 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றால் நிபந்தனைகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றமை உண்மையாகும்.

அதாவது அங்கிருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவியில் மோசடி செய்ய முடியாது, நிதி ஒழுக்கம் பேணப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளே விதிக்கப்படும். 

இந்த நிபந்தனைகள் தவறானவையா? இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தை நாடிய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் , எவ்வித பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை. இலங்கை ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிட்டு முன்னேற வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

இதனை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே செய்ய முடியும். ஐ.தே.க. தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க , 2023 இல் உரம் , பால்மா தட்டுப்பாடு அற்ற சமூகத்தையும் , சீரழிந்து கொண்டிருக்கும் நாட்டை கட்டியெழுப்ப சமூகத்தையும் , நாணயத்தாள்களை வரையறையின்றி அச்சிடும் வழிமுறையை இல்லாதொழித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு , டொலர் இருப்பை அதிகரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார் என்றார்.