( எம்.எப்.எம்.பஸீர்)

கம்பஹா மாவட்டம்,  கொட்டதெனியாவ  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்தேமுல்ல, பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த  உறவினர்களான இரு சிறுவர்கள்  காணாமல் போன விவகாரத்தின் மர்மம் கடந்த 45 நாட்களாக நீடித்த நிலையில், இன்று (6)அந்த சிறுவர்கள் இருவரும் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  

கம்பஹா - மீரிகம பொலிஸ் நிலையத்துக்கு இன்று காலை அவ்விரு சிறுவர்களுடனும் வருகை தந்துள்ள பெண் ஒருவர், அவ்விருவரையும் பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். 

10 வயதான திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும், 12 வயதான  ஜயசேகர முதலிகே அகில தேதுணு ஆகிய சிறுவர்களே இவ்வாரறு காணாமல் போயிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர்களாவர்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் இந்த சிறுவர்கள்  காணாமல்போயுள்ளதாக பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளுக்கு அமைய அச்சிறுவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 

இவ்வாறான பின்னணியில் அந்த இரு சிறுவர்களையும்  கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை  ஊடகங்கள் ஊடாக கோரினர்.

 அத்துடன்  பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய இந்த விவகார விசாரணைகள், குற்றப் புலனய்வுத் திணைக்களத்தின்  திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டன.

அதன்படி  சி.ஐ.டி.யின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும்  மனிதப் படுகொலை பிரிவின்  உதவி பொலிஸ் அத்தியட்சர்களான களு ஆரச்சி மற்றும் கமகே ஆகியோரின்  ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

 இவ்வாறான நிலையிலேயே , மீரிகம  பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றினை நடாத்திச் செல்லும் பெண் ஒருவர் சிறுவர்களை இன்று ( 6) மீரிகம பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளார்.

'நேற்று ( 5 ஆம் திகதி) இரவு வேளையில் நான் கடையை மூடத் தயாரான போது இரு சிறுவர்கள் வந்து உணவு கோரினர்.

அதன் பின்னர் நான் அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று உணவு, உடை என்பனவற்றை வழங்கி அவர்களிடம் விடயங்களை விசாரித்தேன்.

பின்னர் இரவு வீட்டிலேயே தங்கவைத்து, இன்று ( 6 ஆம் திகதி ) காலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து ஒப்படைத்தேன் என  இரு சிறுவர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கம்பஹா மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இந் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரு சிறுவர்களும், பின்னர் மீரிகம பொலிஸாரினால் கொட்டதெனியாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கொட்டதெனியாவ பொலிஸாரும், சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

 பொலிஸ் தகவல்களின் படி, இந்த இரு சிறுவர்களும் காணாமல் போனமை தொடர்பில் சிறுவர்களின் பெற்றோரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் பரஸ்பர வேறுபட்ட தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாகவும், அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிய முடிந்தது.

 மீரிகம பொலிஸாரால் கொட்டதெனியாவ பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட இரு சிறுவர்களும்  இன்று மாலையாகும் போதும் பெரிதாக தகவல்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

எவ்வாறாயினும் நீர்கொழும்பிலிருந்து பஸ் வண்டி ஊடாக மீரிகமவுக்கு வந்ததாக அவர்கள் மீரிகம பொலிஸாரிடம் தெரிவித்ததாக அறிய முடிகிறது.