போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - தாரா விஜேதிலக 

Published By: Digital Desk 3

06 Jan, 2022 | 09:18 PM
image

(நா.தனுஜா)

மூன்று தசாப்தகால யுத்தம் உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிதி ரீதியான இழப்பீட்டை வழங்குவதற்கு மேலதிகமாக, அவர்கள் நிலைபேறான அமைதியுடன் வாழ்வதை உறுதிசெய்வதற்கும் அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நடவடிக்கைகள் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக அதன் தவிசாளர் தாரா விஜேதிலக தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி 'பொறுப்புக்கூறல்' என்பது உயர்மட்டக்கோட்பாடு என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனைப் புரிந்துகொள்வதை விடவும் வடக்கில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, கல்வி, வருமானம் உள்ளிட்ட அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான அவசியம் மிகையாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச் செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் சாட்சியமளிப்பதற்காக முன்னிலையாகியிருந்த இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் தவிசாளர் தாரா விஜேதிலக, கடந்தகால வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் நிலைபேறான அமைதியை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இழப்பீடு வழங்கல் செயற்பாடு தொடர்பில் விளக்கமளித்தார். 

ஆணைக்குழுவின் முன்னிலையில் அவரால் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு,

'இழப்பீடு வழங்கல்' என்பது நிதி ரீதியான நட்டஈடு வழங்கல் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நிலைபேறான அமைதியுடன் வாழ்வதை உறுதிசெய்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதேயாகும். 

அதனை முன்னிறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 34 ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலகச்சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டு, கடந்த 2019 ஏப்ரல் மாதத்திலிருந்து இயங்க ஆரம்பித்திருக்கும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக கடந்தகால வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி ரீதியான இழப்பீட்டை வழங்குதல், மோசமடைந்திருக்கக்கூடிய அவர்களது மனநிலையை சீர்செய்வதற்கான உளவள ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்குதல், கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளடங்கலாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பரந்தளவிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களின் அடிப்படையில் அலுவலகத்திற்கென 8 கொள்கைகளும் 10 வழிகாட்டல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் சிவில் யுத்தத்திற்கு அப்பால் அளுத்கமை, பேருவளை கலவரம், திகன கலவரம், வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைச் சம்பவம், உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் உள்ளடங்கலாக 7 சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தற்போது இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை வடக்கு, கிழக்கில் சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இதுவரையில் சுமார் 11,000 விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்விண்ணப்பப்படிவங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாமை மற்றும் கொவிட் - 19 வைரஸ் பரவல் போன்ற காரணிகளால் அவற்றை முழுமைப்படுத்தும் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், அதனை எதிர்வரும் மார்ச் மாதமளவில் முழுமையாகப் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

அதேவேளை கடந்த 1987 ஆம் ஆண்டிலிருந்து பதிவான இனவன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2021 டிசம்பர் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 7.5 பில்லியன் ரூபா நிதி ரீதியான இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கின்றது. அச்சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காயங்கள், சொத்துச்சேதங்கள் ஆகியவற்றுக்காக பொதுமக்களில் 57,852 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதுடன் இன்னமும் 2024 பேருக்கான இழப்பீடு வழங்கப்படவேண்டியுள்ளது.  

அடுத்ததாக நிதி ரீதியான இழப்பீடு வழங்கலுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதி வழங்கல், கல்வி வாய்ப்பு, உளவள ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களுடனான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தோம். 

அதுமாத்திரமன்றி ஒவ்வொரு மாவட்ட செயலாளருடனும் கலந்துரையாடல்களை நடாத்துவதன் ஊடாகவும் அப்பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்துகொள்ளமுடிந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட செயலாளர் பிரிவின் ஊடாகவும் எமது அலுவலத்தினால் முன்னெடுக்கப்படும் நேரடிக்கலந்துரையாடல்களின் போதும் இழப்பீட்டுக்கான தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டது. 

மேலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகள் என்னவென்பது குறித்த தகவல்களை அவ்வலுவலகமும் எமக்கு வழங்கியிருக்கின்றது. 

எனவே இவ்வாறு பல்வேறு வழிகளிலும் திரட்டிக்கொள்ளும் தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்து கல்வி, வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அமைச்சுக்களுடன் எமது அலுவலகம் பேச்சுவார்த்தைகளை நடத்தும்.

அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உளநல மற்றும் சமூக மேம்பாட்டு ஆலோசனைகளையும் பயிற்சிகளை வழங்குவதற்கான செயற்திட்டத்திற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணை பெறப்பட்டுள்ளது.

இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு மாவட்டங்கள்தோறும் கிளை அலுவலகங்கள் இல்லாதததன் காரணமாக, ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கல்களை முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலகப்பிரிவுகளில் பணிபுரிவோரின் உதவியை எமது அலுவலகம் பெற்றுக்கொள்ளும். 

மேலும் இவ்விடயத்தில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்களும் முனைப்புடன் செயலாற்றிவருவதனால் அவற்றுடனும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். 

இழப்பீட்டின்கீழ் நினைவுகூருதலை அங்கீகரிப்பதற்கான ஆணையும் எமது அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரம் நினைவுகூருதலுக்கான கோரிக்கை பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் பட்சத்தில், அதன் அவசியத்தன்மை குறித்து ஆராய்ந்து அதற்கான வசதிகள் எமது அலுவலகத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இருப்பினும் ஓரிடத்தில் ஒன்றுகூறி நினைவுகூருதல் என்பது சட்ட அமுலாக்கத்துடன் தொடர்புடைய விடயமேயன்றி, அதுபற்றி எமது அலுவலகம் கவனத்திற்கொள்ளாது என்று தெரிவித்தார்.

இதன்போது பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீட்டுக்கான அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தாரா விஜேதிலக, 'பொறுப்புக்கூறல்' என்பது உயர்மட்டக்கோட்பாடு என்றும் அதன் தாற்பரியத்தை விளங்கிக்கொள்வதை விடவும் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு உணவு, கல்வி, வருமானம் உள்ளடங்கலாக தமது வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கைகளே மிகையாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

அதுமாத்திரமன்றி அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பான நம்பகத்தன்மையின்மை வடக்கில் உயர்வாகக் காணப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பகத்தன்மையை வென்றெடுக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் அதி சொகுசு...

2025-01-21 17:42:13