(எம்.மனோசித்ரா)

எனக்கும் காரசாரமாக கருத்து வெளியிட முடியும் என்பதை காண்பிப்பதற்காகவே மாத்தளையில் மிகவும் கடுமையாக உரையாற்றினேன்.

எதிர்வரும் 3 மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுசீரமைக்கப்பட்டு புத்தெழுச்சி பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எனக்கும் காரசாரமாக கருத்து வெளியிட முடியும் என்பதற்காகவே மாத்தளையில் மிகவும் கடுமையாக உரையாற்றினேன்.

எனக்கு அவ்வாறு பேச முடியாது என்று சிலர் எண்ணிக் கொண்டிருந்தனர். அதற்கு சிறந்த பதிலடி கொடுத்துள்ளேன். 

1956 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்கவில்லை. 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்க அதன் பின்னர் 1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன தனித்து ஆட்சியமைத்தாலும் அவர்களால் வெற்றிகரமாக தொடர்ந்தும் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளே இதற்கு காரணமாகும்.

தற்போது நிவாரணங்களுக்கோ அல்லது பொருட்களுக்கோ ஏமாந்து மக்கள் இனிவரும் தேர்தல்களில் வாக்களிக்க மாட்டார்கள். ஊழல் , மோசடியற்ற ஆட்சியாளர்களையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

தேர்தல்களின் போது ஊழல், மோசடியை முற்றாக ஒழிப்பதாகக் கூறுபவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அந்த வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். 

2015 இன் பின்னர் மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் இன்றும் என்னால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சுமூகமாகப் பயணித்திருக்க முடியும்.

தற்போது நடைமுறையிலுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முற்றாக நீக்கப்பட வேண்டும். எனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சில மாற்றங்களை செய்து அதனை மீள நடைமுறைப்படுத்த வேண்டும். 

19 ஆவது திருத்தத்தில் நிறைவேற்றதிகாரமானது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூன்று தரப்பினருக்கும் வழங்கப்பட்டமை பாரிய குறைபாடாகும்.

இவ்வாறான குறைபாடுகள் நிச்சயம் நீக்கப்பட வேண்டும். காரணம் இவற்றின் காரணமாகவே 19 இன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடையமுடியாமல் போனது.

எனக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எந்தவொரு தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது. மோசடிக்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்தமையே பிளவிற்கான பிரதான காரணமாகும்.

இந்தியாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் மோசடி குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் இலங்கையில் இதுவரையில் அவ்வாறு எந்தவொரு அரசியல்வாதியும் சிறைதண்டனையை அனுபவிக்கவில்லை. இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான் கையெழுத்திட்ட போது அனைத்து பெண்களும், தாய்மாரும் எனக்கு ஆதரவளித்தனர்.

ஆனால் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவரும் கைகோர்த்துக் கொண்டு எதிர்ப்பினை வெளியிட்டனர். 

இவ்வாறான கடுமையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் எம்மால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. வழக்கு விசாரணைகளை 3 - 6 மாதங்களுக்குள் நிறைவடையச் செய்து , தண்டனையை வழங்க வேண்டும்.

அரசியலிலிருந்து கொண்டு மோசடிகளில் ஈடுபடுபவர்களே இதனை எதிர்க்கின்றனர். காரணம் அரசியல்வாதியொருவர் தவறிழைக்கும் போது ஏனைய அனைவரும் இணைந்து அவர்களைப் பாதுகாக்கின்றனர். 

நாட்டில் காணப்படுகின்ற டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாணயத்தாள்களை அச்சிடுவது பிரயோசனமற்றது. அதனால் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தொடர்புகளே அத்தியாவசியமாகின்றன.

இவ்வாறான பல்வேறுபட்ட தேசிய சிந்தனைகளுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வேறு எந்தவொரு கட்சிக்கும் ஆழமான தேசிய சிந்தனை கிடையாது. நாம் எந்தவொரு கட்சிக்கும் பின்னால் செல்லும் கூட்டணியல்ல. 

எமது வேலைத்திட்டத்தை முன்வைத்து, அதன் ஊடாகவே எம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுகின்றோம். 3 மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுசீரமைக்கப்பட்டு புத்தெழுச்சி பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.