(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் அரசாங்கத்தின் கொன்கை பிரகடன உரை மீது சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் அரசியலமைப்பில் தனக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டு பாராளுமன்ற சபை நடவடிக்கையை ஒத்திவைத்தார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்ற அடுத்த சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதன் பிரகாரம் 1978 அரசியலமைப்பு 33ஆம் உறுப்புரைக்கமைய ஜனாதிபதி 18 ஆம் திகதி சிம்மாசன உரையை மேற்கொண்ட பின்னர் அதுதொடர்பில் சபை ஒத்திவைப்பு பவிவாதம் ஒன்றை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும்.

கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், இதுதொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 19,20 அல்லது 21ஆம் திகதிகளில் நடத்த முடியும்.