எமது ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான நான்கு விடயங்கள் உடன் அமுல்படுத்தப்படும் - எரான் விக்ரமரத்ன

06 Jan, 2022 | 09:15 AM
image

(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அதனை சீர்செய்வதற்கு நான்கு பிரதான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும். 

அதன்படி நாங்கள் ஆட்சிபீடமேறும் பட்சத்தில் நாட்டின் நிதிநிலை தொடர்பான சர்வதேசத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தல், ரூபாவின் பெறுமதியை உரியவாறு நிலையான மட்டத்தில் பேணல், கடன் வழங்குனர்களுடன் வலுவான நிலையிலிருந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல், மத்திய வங்கியை சுயாதீனத்துவப்படுத்தல் ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன உறுதியளித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் ஆட்சிப்பொறுப்பை எம்மிடம் கையளித்தால், நாம் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நிச்சயமாக நாட்டை மீட்டெடுப்போம். முதலாவதாக இருவேறு தரப்பினருக்கிடையில் கொடுக்கல், வாங்கல் இடம்பெறும்போது அவர்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பகத்தன்மை உயர்மட்டத்தில் காணப்படவேண்டும். 

அதனை முன்னிறுத்தியே சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்களால் ஒவ்வொரு நாடுகளும் அவற்றின் நிதிநிலை, கடன் மீளச்செலுத்துகை ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றன. 

ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ், மூடியின் முதலீட்டாளர்சேவை மற்றும் ஃபிட்ச் ரேட்டிங் ஆகிய மூன்று முக்கிய சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களாலும் இலங்கை தரமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அரசாங்கம் தொடர்ச்சியாக மறுதலித்துவருகின்றது. இவ்வாறு இந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லமுடியும் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கருதுவார்களேயானால், அது முட்டாள்தனமான சிந்தனையாகும். 

எனவே இவ்விடயத்தில் நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினையொன்று காணப்படுகின்றது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் எமது அரசாங்கத்தின்மீதான நம்பகத்தன்மை உயர்மட்டத்தில் காணப்பட்டது.

அடுத்ததாக அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதுடன் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன்விளைவாக இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளடங்கலாக வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிபுரிந்து தமது குடும்பத்திற்கு அனுப்பிவைக்கின்ற பணத்தின்மீது அரசாங்கம் மட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதுமாத்திரமன்றி வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டிற்குப் பணம் அனுப்பிவைக்கப்படும் வழிமுறைகள் தொடர்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் ஆட்சிபீடமேறினால் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை ஏற்றுக்கொள்ளத்தக்க மட்டத்திற்குக் கொண்டுவருவோம்.

அதேபோன்று தற்போது நாடு பாரிய கடன்சுமைக்கு முகங்கொடுத்திருக்கின்றது. நாம் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பைக் கையளித்தபோது 7.8 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டுக்கையிருப்பு, இருவருடங்களுக்குள் 1.7 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்தது. 

ஆனால் கடந்த டிசம்பர்மாத இறுதியில் வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 3.1 பில்லியன் டொலர்கள் என்று மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது. இருப்பின் பெறுமதியில் அத்தகைய சடுதியான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மத்திய வங்கியினால் தெளிவுபடுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

எனவே நாட்டின் பொருளாதாரம் மிகமோசமாகச் சீர்குலைந்திருப்பதுடன் நிதி உறுதிப்பாட்டின் மீதான நம்பகத்தன்மை சரிவடைந்திருப்பதன் காரணமாக வெளிநாடுகளுடனான கொடுக்கல், வாங்கல்களின்போது அந்நாடுகளால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு எமது நாடு கட்டுப்படவேண்டியிருக்கின்றது. 

கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்னுற்பத்திநிலைய ஒப்பந்தமும் அதன் விளைவு என்றே கூறவேண்டும். இருப்பினும் நாம் ஆட்சிபீடமேறினால் இத்தகைய நிலையேற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். மாறாக மிகவும் வலுவான நிலையில் இருந்துகொண்டுதான் சர்வதேச நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

மேலும் நாட்டின் பொதுக்கட்டமைப்பான மத்திய வங்கி தற்போதைய அரசாங்கத்தினால் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. எமது அரசாங்கம் அதன் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும். 

அதேவேளை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குதல் உள்ளடங்கலாக சில அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கின்றார்.

அவ்வாறெனில் நாட்டின் மொத்த சனத்தொகையில் அரச ஊழியர்களை விடவும் பெரும்பான்மையாக உள்ள தனியார் ஊழியர்களின் நிலையென்ன? அன்றாடக்கூலித்தொழிலாளர்கள், கைத்தொழில் முயற்சியாளர்களின் நிலையென்ன? ஆகவே அத்தியாவசியப்பொருட்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொருட்களினதும் விலைகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக மாத்திரமே நாட்டுமக்கள் அனைவருக்கும் நிவாரணத்தை வழங்கமுடியும். 

அதுமாத்திரமன்றி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டவாறான கொடுப்பனவுகளை வழங்குவதற்காகப் புதிதாகப் பணத்தை அச்சிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது. 

அவ்வாறு செய்யும் பட்சத்தில் பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் உயர்வடைவதால், பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். ஆகவே எமது ஆட்சியில் பொருட்களின் விலைகளை சரியான மட்டத்தில் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32