உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்டிருந்த விசா வியாழன் அன்று இரத்து செய்யப்பட்டது.

இதனால் அவர் மெல்போர்னில் நடக்கும் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்பதற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காணவரும் ரசிகர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வீரர்-வீராங்கனைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
ஆனால் நம்பர்-1 வீரரும், 9 முறை அவுஸ்திரேலிய ஓபனை வென்றவருமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தினாரா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தார்.
இதனால் அவர் அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தாமல் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாட அனுமதி கிடைத்திருப்பதாக ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி உள்ளார்.
இந் நிலையிலேயே மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சின் அவுஸ்திரேலியா நுழைவுக்கான விசா வியாழக்கிழமை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் போட்டியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டு, வியத்தகு முறையில் நாடு கடத்தப்படுவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.