(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம். விவசாயத்துறை அமைச்சின் முன்னேற்றங்களை அறியாதவர்கள் தான் விவசாயத்துறை அமைச்சு தோல்வி என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். விமர்சனங்களுக்காக நிலைபேறான விவசாயத்துறை கொள்கை திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

போஸ்பட் அரச நிறுவனத்தின் 50 வருட கால பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விவசாயத்துறை அமைச்சின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்களின் நிர்வாக கட்டமைப்பு மறுசீரமைக்ப்பட்டை தொடரந்து அந்நிறுவனங்கள் 825 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளன. ஜனவசம், மில்கோ, பொஸ்பேட் மற்றும் என்.எல்.டி.பி ஆகிய நிறுவனங்கள் கடந்த காலங்களில் 3,850 மில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டன. இத்தகவல்களை அறியாதவர்கள் விவசாயத்துறை அமைச்சு தோல்வி (பெய்ல்)என குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

நாட்டில் எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பலர் குறிப்பிட்டுள்ளார்கள். டுபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் அந்நாட்டு மக்கள் பட்டினியாக இருப்பதில்லை. 

உலக நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் போது உணவு உள்ள நாடுகளில் இருந்து உணவு பொருட்களை பெற்றுக் கொள்வது வழமையான செயற்பாடாகும்.

போஸ் பொஸ்பேட் உர நிறுவனம் கடந்த ஆறு மாதகாலத்திற்கு முன்னர் விவசாயத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.அவ்வேளையில் அந்நிறுவனம்  பாரிய நட்டத்தை எதிர்க்கொண்டிருந்தது. இருப்பினும் அந்நிறுவனம் தற்போது இலாபமடையும் நிலைக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

பொஸ்பேட் நிறுவனம் 50 கிலோகிராம் உரத்தை 550 ரூபாவிற்கு விநியோகித்தாலும் ஏனைய சந்தைகளில் பொஸ்பேட் உரம் 1,000 ரூபா தொடக்கம் 1,100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறான நிலைமையினை மாற்றிமைக்க உரிய திட்டங்கள் இனிவரும் நாட்களில் செயற்படுத்தப்படும்.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அரசாங்கம் உரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நாட்டில் எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

கடந்த காலங்களை காட்டிலும் விவசாயத்துறை அமைச்சு தற்போது முன்னேற்றமடைந்துள்ளது.குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு ஒரு சிலர் விவசாயத்துறை அமைச்சின் முன்னேற்றத்தை அறியாமல் விவசாயத்துறை அமைச்சு தோல்வி (பெய்ல்) என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். விமர்சனங்களை கண்டு ஒருபோதும் அஞ்சபோவதில்லை என்றார்.