வாய்ப்பாட்டு கலைஞர்கள் நாளாந்தம் இசை பயிற்சி செய்வது அவசியமானது - வாய்ப்பாட்டுக் கலைஞர் உமா ராமகிருஷ்ணன்

Published By: Digital Desk 2

05 Jan, 2022 | 04:54 PM
image

மார்கழி மாதம் என்றாலே மங்கல இசை ஒலிக்கும் மாதம் என்றே சொல்லலாம். திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாசுரங்களை அதிகாலையில் பாடி நேர்மறையான அதிர்வலையை ஏற்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேறுபவர்கள் ஏராளம். 

இந்நிலையில் வாய்ப்பாட்டு கலைஞர்களில் தன்னிகரற்ற குரல் வளமை பெற்றவரும், மேடைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக சங்கீதத்தை இசைத்து முன்னணி கலைஞராக வலம் வரும் திருமதி உமா ராமகிருஷ்ணன் அவர்களை சங்கத்திற்காக சந்தித்தோம்.

உங்களைப் பற்றி..?

பாரம்பரியம் மிக்க நாமசங்கீர்த்தனம் இசைக்கும் இசை குடும்பத்தில் பிறந்ததால் கர்நாடக இசை, சாஸ்திரிய சங்கீத ஒலிகளை கேட்டுக்கொண்டே இருந்ததால், பால்ய பிராயத்திலேயே இசை மீது ஆர்வம் ஏற்பட்டது.  எம்முடைய தாத்தா பி. ஆர் சங்கர ஐயர் நாம சங்கீர்த்தன கலைஞர். ஏழு வயதாக இருக்கும் பொழுது எம்முடைய அத்தை உறவு இசைக்கலைஞரான மீனாட்சியம்மாள் அவர்களிடம் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையைக் கற்றுக் கொண்டேன். 

அதனைத் தொடர்ந்து பாடசாலையில் கல்வி பயிலும் போது எம்முடைய தனித் திறமையை அவதானித்த வகுப்பாசிரியர் இறைவணக்க பிரார்த்தனையின் போது எமக்கு பாடுவதற்கு வாய்ப்பளித்தார். 

அதன்பிறகு பாடசாலை நடைபெறும் இசைப் போட்டியில் பங்குபற்றி ஏராளமான விருதுகளை வென்றேன். சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் பணியாற்றும் இசைக் கலைஞர் திருமதி ஜெயலட்சுமி சீனிவாசன் அவர்களிடம் முறைப்படி சங்கீதம் பயின்றேன். 

அவர்களிடம் வாய்ப்பாட்டையும், வீணையையும் கற்றுக்கொண்டேன். இதனைத்தொடர்ந்து இசைத்துறையில் நுட்பங்களை கற்று, மேம்படுத்திக் கொள்வதற்காக சித்திர வீணை இசைக் கலைஞர் கணேஷ் அவர்களின் மேற்பார்வையில் இசைப் பயிற்சியை பெற்று வருகிறேன். 

மேலும் இசைக்கலைஞர் ஸ்ரீராம் பரசுராம்  மற்றும் மன்னார்குடி ஜே பாலாஜி அவர்களிடம் இசையின் நுட்பங்களை கற்று வருகிறேன். இந்த குருமார்களின் பயிற்சி மற்றும் வழிகாட்டலில் தான் நான் வாய்ப்பாட்டு இசை கலைஞராக பயணப்படுகிறேன்.

இசையில் ஆர்வம் ஏற்பட்டதன் பின்னணி..,?

எம்முடைய தாத்தா-பாட்டி அவர்களின் தொடர்ச்சியான ஊக்கத்தால் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அவர் நாமசங்கீர்த்தனம் என்ற இசை வடிவத்தை பிரபலப்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர். 

நாங்கள் வசிக்கும் கேரள பகுதியில் நாம சங்கீர்த்தனம் குறித்து மலையாள மொழியில் எந்த நூலும் வெளியாகவில்லை. எம்முடைய தாத்தா தான் முதன் முதலாக மலையாள மொழியில் நாமசங்கீர்த்தனம் குறித்த நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். இசையை மட்டும் கற்பிக்காமல், வாழ்க்கையையும், அதனுடைய முக்கியத்துவத்தையும் உணரச் செய்தவர். 

ஒரு இசைக் கலைஞருக்கு இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பு குறித்தும், சுய ஒழுக்கம் குறித்தும் நிறைய விடயங்களை அறிவுரையாக பகிர்ந்திருக்கிறார். தினமும் பயிற்சி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்களின் அனுபவத்திலிருந்து எமக்கு சொல்லியதால் இன்றுவரை நாளாந்தம் பயிற்சி செய்கிறேன்.

உங்களுடைய முதல் மேடை அனுபவம் குறித்து..?

இன்றுவரை மறக்க இயலாத அனுபவம் அது. எம்முடைய பாடசாலையில் நடைபெற்ற பக்தி பாடலுக்கான போட்டியில் ஐயப்பனை பற்றி மலையாள மொழியில் வெளியான பாடலை பாடி, முதல் பரிசினை பெற்றேன். 

அந்த போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு பற்றியது பின்னர் தான் தெரிய வந்தது.

மேடை கச்சேரி அனுபவங்களில் இன்றும் பசுமையாய் பதிந்திருக்கும் நிகழ்ச்சி குறித்து...?

கோட்டயம் அருகே பனிச்சிக்காடு என்ற ஊரில் உள்ள சரஸ்வதி ஆலயத்தில் நவராத்திரி விழாவின்போது பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஆலயத்தில் ஆன்மீக அதிர்வலை அதிகம் இருக்கும். அங்கு பாடுவதற்கு கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதி பாடியது மறக்க இயலாது. 

அதேபோல் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாள் சன்னதிக்கு முன் எம்முடைய குருவுடன் இணைந்து பாடியதும் மறக்க இயலாது. இதன்போது மகாராஜா பரம்பரையினர் முன்வரிசையில் பார்வையாளராக அமர்ந்து, எம்முடைய இசையைக் கேட்டதும் மறக்க இயலாது. 

அதேபோல் சென்னையில் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற மார்கழி இசை விழாவில் தொடக்க இசை கச்சேரியில் பாடியிருக்கிறேன். இதுவும் மறக்க இயலாது. 

ஏனெனில் இந்நிகழ்விற்கு சித்திர வீணை நரசிம்மன், சசிகிரண், ராஜா ராமவர்மா உள்ளிட்ட ஏராளமான  முன்னணி இசைக் கலைஞர்கள் பார்வையாளர்களாக வருகை தந்து எம்முடைய இசையைக் கேட்டு, பாராட்டியது மறக்க இயலாது.

இசைத்துறையில் தங்களுடைய பங்களிப்பு குறித்து...?

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நாங்கள் வசித்தபோது, அங்குள்ள இந்தியர்களை ஒருங்கிணைத்து இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறேன். 

முதன்முதலாக அங்கு தியாகராஜர் ஆராதனையை அந்த நகர நிர்வாகத்தின் அனுசரணையுடன் ஒருங்கிணைத்து இருக்கிறேன். அங்குள்ளவர்களுக்கு கர்நாடக இசையில் பயிற்சி அளித்திருக்கிறேன். 

மேலும் அங்குள்ள மேலைத்தேய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.  ஜாஸ் என்னும் இசை வடிவத்துடன் இணைந்து ஃப்யூஷன் கச்சேரிகளில் பங்குபற்றியிருக்கிறேன். ஹிந்துஸ்தானி இசையும், மேலைத்தேய சாஸ்திரிய இசை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன். 

இதுதொடர்பான அல்பங்களும் வெளியாகியிருக்கின்றன. ‘ஜெய துர்கா’ என்ற பெயரில் தேவியின் கீர்த்தனைகளை தேடி கண்டறிந்து, அதற்கு இசையமைத்து, பாடி பக்தி அல்பமாக வெளியிட்டிருக்கிறேன். 

கடந்த 8 ஆண்டுகளாக அமிர்தவர்ஷினி என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இசை சேவை செய்து வருகிறேன். இந்த அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இசையையும் கற்பித்து வருகிறேன். இணையம் வழியாகவும் கற்பித்து வருகிறேன்.

‘தற்போதைய மேடை கச்சேரிக்கான உள்ளடக்கத்தினால் தான் கர்நாடக இசை என்பது பார்வையாளர்களுக்கு சோர்வையும், அயர்ச்சியையும் தருகிறது. அதனால் இதில் மாற்றங்கள் தேவை’ என ஒரு பிரிவினர் தெரிவிக்கும் கருத்திற்கு தங்களின் பதில் என்ன..?

மாற்றங்கள் தேவை என்றாலும், பாரம்பரிய மேடை கச்சேரிக்கான உள்ளடக்கத்தில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய சில சிறிய மாற்றங்களை செய்துகொள்வது சரி தான் என கருதுகிறேன். இருப்பினும் தற்போதைய இசைக்கலைஞர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் பல்வேறு இசை நுட்பங்களை மேடை ஏற்றி, பரிசோதனை முயற்சியில் ஈடுபடலாம் என்பதும் எம்முடைய தனிப்பட்ட கருத்து. 

குறிப்பாக வர்ணத்தை சதுஸ்ர ஜதியில் பாடுவதை விட, மிஸ்ர ஜதியில் பாடலாம். இசைக்கலைஞர் ரவிகிரண் தற்போது கண்ட நடையில் ஒரு வர்ணத்தை வடிவமைத்திருக்கிறார். இதைப் பாடுவது பாடகருக்கு சவாலானது. 

பார்வையாளர்களுக்கும் புதிதாக இருக்கும். இதனை முயற்சிக்கலாம். வழக்கமாக வர்ணத்தில் நின்னுக்கோரி.. மோகன வர்ணம்... என பாடுவதை விட, இதுபோன்ற புதிய வடிவமைப்பை பாடலாம். இதனையும் வழக்கமான கால அளவுகளில் பாடுவதை விட, வெவ்வேறு இசை குறிப்பளவுகளில் பாடலாம். 

அதேபோல் எப்போதும் சங்கராபரணம் போன்ற பிரபலமான ராகங்களை படுவதை விட அரிய ராகங்களை எடுத்து பாடுவதும் பார்வையாளர்களுக்கு நல்லதொரு ரசனையை வழங்கும். அண்மையில் கூட ராஜா ராமவர்மா லவங்கி என்ற ராகத்தை பாடியிருக்கிறார்.

 தில்லானா பாடும்போது கூட வழக்கமாக கண்ட நடையில் பாடுவதை விட எம்முடைய குருநாதர் மன்னார்குடி ஜே பாலாஜி சங்கீர்ண சாப்புவில் தில்லானாவை வடிவமைத்திருக்கிறார். இதனை பாடலாம். துக்கடா பாடும் போதும் அனைத்து தருணங்களிலும் தியாகராஜரின் பாடலையே பாட வேண்டும் என்ற அவசியமில்லை. 

வேறு மொழிகளில், வேறு இசை மேதைகள் உருவாக்கியிருக்கும் பாடல்களை பாட முயற்சிக்கலாம். ரவிந்திர சங்கீத் என்ற துக்கடாவையும் பாடலாம். இது போன்ற பல விடயங்களை உள்ளடக்கத்தில் மாற்றம் செய்தால், மேடைக் கச்சேரி புதிய அனுபவத்தை பாடகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வழங்கும்.

இன்றைய இளம் கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் விடயம் என்ன?

மிக இளம் வயதிலேயே இசையை பயின்று மேடை கலைஞராக புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. இதை தவறு என குறிப்பிட மாட்டேன். ஆனால் இசையை அதன் முழுமையான அடர்த்தியுடன் கற்றுக்கொண்ட பிறகு மேடையேறி வாய்ப்பாட்டு பாடும்போது உங்களின்  தனித்துவமான திறமையும் குருவின் ஆசியும் இணைந்து வெளிப்படும். 

இது உங்களை உலக அளவில் அடையாளப்படுத்தும். இசை பயிற்சியின்போது குரு கற்றுக்கொடுத்த பாணியில் பாடுவது என்பது ஒப்பற்ற கலைஞருக்குரிய தகுதியல்ல. 

குரு கற்பிக்கும் போது, அதன் இசை நுட்பத்தை உள்வாங்கி நீங்கள் உய்த்துணர்ந்து பாடுவதுதான் சிறந்த கலைஞர்களுக்கான முதல் அடையாளம்.  அதனால் குறுகிய பயிற்சி பெற்று மேடையேறி புகழ் வெளிச்சத்தில் பயணப்படுவதை விட, குறுகிய பயிற்சியில் பெற்ற இசையை நீங்கள் உட்கிரகித்து, அதனை இயல்பாக வெளிப்படும் வரை பொறுமையுடன் காத்திருந்தால் நிரந்தர வெற்றி உறுதி. 

இசையை உபாசனை போல் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சந்திப்பு : கும்பகோணத்தான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right