மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பாரியளவிலான முச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் மஹாபாகே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கனேமுல்ல பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி திருட்டு முறைப்பாடு தொடர்பில் மஹாபாகே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் ராகம, மஹாபாகே, வத்தளை, ஜா-எல, கந்தானை, பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் இருந்து முச்சக்கர வண்டிகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேல்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 17 முச்சக்கர வண்டிகளில் இருந்து 12 முச்சக்கர வண்டிகள் மற்றும் 5 முச்சக்கர வண்டி பாகங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 26, 28 மற்றும் 30 வயதுடைய கனேமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் நேற்று வெலிசர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.