(எம்.எம்.சில்வெஸ்டர்)

நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய நான்காவது நாள் நிறைவில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி 147 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை 17 ஓட்டங்கள் மாத்திரம் முன்னிலையில் பெற்று இக்கட்டான நிலையில் உள்ளது. 

Story Image

நேற்றைய தினத்தை 6 விக்கெட்டுக்கள் இழந்து 401 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி  458 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் மஹ்மதுல் ஹசக் ஜோய் (78),நஜ்முல் ஹசன் ஷென்டோ (64), மொமினுல் ஹக் (88), லிட்டன் தாஸ் (86) அரைச் சதங்கள் அடித்து பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலு சேர்த்தனர்.

இறுதிக்கட்டத்தில் மெஹதி ஹசன் மிராஸஸும் தம்பங்குக்கு  47 ஓட்டங்களை அடித்துக் கொடுத்தார்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், நெய்ல் வேக்னர் 3  விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

130 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 147 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து சொந்த மண்ணில் பரி தவிக்கிறது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் டொம் லெத்தம் 14 ஓட்டங்களுடன்  வெளியேறியதுடன், முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய டெவொன்  கொன்வே 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான வில் யங்குடன் ஜோடி சேர்ந்த சிரேஷ்ட வீரரான ரொஸ் டெய்லர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி அணியை மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.

இவ்வாறு இந்த ‍ ஜோடி தமக்கிடையில் 73 ஓட்டங்களை பகிர்ந்திருந்தவேளையில்,  வில் யங்க 69   ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறவே, அடுத்து வந்த ஹென்றி நிக்கலொஸ், டொம்  பளண்டல் இருவரும்  ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழக்கவே நியூஸிலாந்து அணி பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. 

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து 5 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்று 17 ஓட்டங்களை மாத்திரமே முன்னிலை பெற்றுள்ளது. ஆடுகளத்தில் ரொஸ் டெய்லர் 37 ஓட்டங்களுடனும், ரச்சின் ரவீந்திர 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.

பந்துவீச்சில்‍ எபடோட் ஹுசைன் 4 விக்கெட்டுக்களையும் தஷ்கின் அஹமட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நாளை போட்டியின் ஐந்தாவதும் கடைசியும் தினமாகும். 

போட்டிச் சுருக்கம்

நியூஸிலாந்து அணி 328/10  & 147/5

பங்களாதேஷ் அணி 458/10