(எம்.மனோசித்ரா)

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். மாறாக 51 சதவீத பங்குகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வசமாக்கி உரிமத்தினை உறுதிப்படுத்தியுள்ளோம் என்று அமைச்சரவை இணைபேச்சாளரும் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (4) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் வாரத்திற்குள் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் குறித்த ஒப்பந்தத்தை கையெழுத்திட எதிர்பார்த்துள்ளோம். 

80 இலட்சம் எண்ணெய் தாங்கிகளை ஒரே சந்தர்ப்பத்தில் களஞ்சியப்படுத்தக் கூடிய திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியை அமைத்து நூறு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும் , அவற்றில் பலவற்றை இன்னமும் பயன்படுத்தாத நிலைமையே காணப்படுகிறது. 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட மூன்று ஒப்பந்தங்களின் காரணமாக கொலன்னாவை, முத்துராஜவெல ஆகிய இடங்களில் பல பில்லியன் செலவிட்டு பாரிய தாங்கிகளை அமைத்துள்ளோம்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறாகும். 1987 , 2003 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன. 

2017 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே மேலும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. எனினும் நாம் 14 எண்ணெய் தாங்கிகள் தவிர்ந்த ஏனைய 85 தாங்கிகளையும் இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் 16 மாதங்களுக்குள் பயன்படுத்தாமல் காணப்பட்ட தாங்கிகளை பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதற்கு எம்மால் முடிந்துள்ளது. அதற்கமைய கிடைக்கப்பெற்ற அமைச்சரவை அனுமதியின் ஊடாக அனைத்து தாங்கிகளும் மீள இலங்கைக்கு கிடைக்கப் பெறுகிறது. 

அதன் பின்னர் 3 ஒப்பந்தங்களின் ஊடாக 24 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும் , 14 எண்ணெய் தாங்கிகளை இந்திய பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும், 61 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றை இணைத்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்திற்கு 50 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 14 தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ள போதிலும், 85 தாங்கிகளை இலங்கை வசப்படுத்தியுள்ளோம்.

இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த ஒப்பந்ததத்தை கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டது. எனவே மீண்டும் இது தொடர்பில் கலந்துரையாடி ஒப்பந்தத்தினை கையெழுத்திடும் தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எவ்வாறிருப்பினும் அடுத்த வாரமளவில் ஒப்பந்தத்தை கையெழுத்திட முடியும். 

99 எண்ணெய் தாங்கிகளில் 14 தாங்கிகள் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 24 தாங்கிகளும், எஞ்சியுள்ள 61 தாங்கிகளும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட் என்ற நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளதாகும். இது நூறு வீதம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாகும்.

இந்த 61 எண்ணெய் தாங்கிகளில் 49 வீதம் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், 51 சதவீதம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமும் காணப்படுகிறது. அதற்கமைய இந்நிறுவனத்தின் பெரும்பான்மை நிர்வாகம் இலங்கை வசமே காணப்படுகிறது. 

பணிப்பாளர் சபையின் 7 உறுப்பினர்களில் நால்வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே நியமிக்கிறது. அது மாத்திரமின்றி நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிக பங்கு இலங்கை வசமாவதன் ஊடாக அது அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு உரியதாகிறது.

அரச நிறுவனமாகும் போது கணக்காய்வாளர் நாயகத்தினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தவும், போக் குழுவிற்கு பணிப்பாளர் சபையை அழைத்து கேள்வியெழுப்பவும், பாராளுமன்றத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வியெழுப்பவும் முடியும்.

அதனடிப்படையில் முழுமையாக அரச பொறிமுறையின் கீழ் இயங்கும் ஒன்றாகவே இந்நிறுவனம் அமைந்துள்ளது. மாறாக இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாக அல்ல என்றார்.