(நா.தனுஜா)
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ நாளையும், நாளை மறுதினமும் திருகோணமலை மாவட்டத்தின் பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன் இதன்போது குறிஞ்சாங்கேணி படகு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவிகளையும் வழங்கிவைக்கவுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அண்மைக்காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகின்றார். அதுமாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளைத் தெரிவுசெய்து அவற்றுக்கு கணினி உள்ளடங்கலாக டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கின்ற செயற்திட்டமும் அவரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாளைய தினம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சஜித் பிரேமதாஸ, காலையில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்குச்சென்று வழிபாடுகளில் ஈடுபடவிருப்பதுடன் பின்னர் குறிஞ்சாங்கேணி படகு விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கான நிதியுதவிகளையும் வழங்கவுள்ளார்.
அதுமாத்திரமன்றி நிலாவெளி சம்பல்தீவு தமிழ் பாடசாலை, கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம், மூதூர் அல் மினா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு அவசியமான டிஜிட்டல் கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைப்பதுடன் மாலையில் மூதூரில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தைத் திறந்துவைப்பார்.
அதேவேளை நாளை மறுதினம் புதன்கிழமை கந்தளாய் ஸ்ரீ அக்ரபோதி ரஜமகா விகாரை, ஆனந்தவௌ திஸ்ஸ ரஜமகா விகாரை ஆகியவற்றுக்குச்சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவிருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனைத்தொடர்ந்து திருகோணமலை பேராயரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் சேருவில தேர்தல் தொகுதியின் பிரதான அலுவலகத்தையும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரின் பிரதான அலுவலகத்தையும் திறந்துவைப்பதுடன் வான் எல மகா வித்தியாலயத்திற்குத் தேவையான டிஜிட்டல் கற்றல் உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கவைப்பார்.
நிறைவாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மாலை 5 மணிக்கு தோப்பூரில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.