ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 01

Published By: Digital Desk 2

03 Jan, 2022 | 08:37 PM
image

ஸ்ரீ அரவிந்தரை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் அவர் ஒரு பூரண யோகி, இந்திய தத்துவவியலாளர், ரிஷித்துவம் அடைந்த கவி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வித்து, இந்திய தேசியவாதி. சுருக்கமாக உலகிற்கும், மனித குலத்திற்கும் பாரத தேசம் எதை வழங்கலாம் என்பதைப் பற்றி சரியாகக் கணித்து அதற்காகச் செயல் புரிந்தவர் அவர். 

ஓர் ஆன்மா எப்படி பரிணாமம் அடைகிறது என்பதை யோகதத்துவத்தின் மூலம் புரிந்துகொண்டு அதை மக்களுக்கு விளக்கிக் கூற தனது யோக வாழ்க்கையின் சுருக்கத்தை மூன்று அரும்பெரும் நூல்களாக ஆக்கித் தந்துள்ளார். 

யோகத்தின் விதிகளை அறிவியல் தர்க்க மனத்துடன் அணுகுபவர்களுக்கு அவற்றை தெளிவாக விளங்கிக்கொள்ள ’யோகங்களின் ஒருங்கிணைப்பு’ என்ற நூலும், ’மனித வாழ்க்கையை எப்படி தெய்வீக வாழ்க்கையாக மாற்றுவது என்ற விதிகளைக் கூற ’தெய்வீக வாழ்க்கை’ என்ற நூலையும் எழுதினார்.

இறுதியாக விதிகளைப் புரிந்து கொண்ட மனிதன் அதை அனுபவமாக தன்னுள் எப்படிப் பெறுவது என்ற கேள்விக்கு காவியமாக ’ஸாவித்ரி’ காவியத்தைப் படைத்தார். இந்தக் காவியம் அவர் உடலை விடுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் வரை அவர் தொடர்ச்சியாக ஐம்பது வருடங்களாக எழுதிய அனுபவ காவியம். 

இந்த அரியகாவியத்தைப் பற்றி அவரது சொற்களில் குறிப்பட்டதன் தமிழ் வடிவம் பின்வருமாறு,

சத்யவான் ஸாவித்ரி கதை என்பது மகாபாரதத்தில் வரும் திருமணக் காதல் எப்படி மரணத்தை வென்றது என்பதைப் பற்றியதாகும்.

ஆனால் இந்தப் புராணக்கதை மனிதவாழ்க்கை பற்றிய கதையாக உருவகிக்கப்பட்டாலும் பல வேத இரகசியங்களை குறியீட்டு சங்கேதங்களாக தன்னுள் கொண்டிருக்கிறது. சத்தியவான் என்பது தெய்வீக சத்தியத்தை தாங்கிய ஆன்மா தனது அறியாமையில் மரணத்திற்குள் மாட்டிக்கொண்ட நிலையைக் குறிப்பதாகும்.

ஸாவித்ரி - சூரியக் கடவுளின் மகள், தனக்கு நிகரற்ற சத்திய ஆற்றல் கொண்ட பராசக்தியின் வடிவம் ஆனடு அனைவரையும் காப்பதற்கு கீழறங்கி வரும் நிலையைக் குறிக்கிறது. அசுவபதி என்பது பரிகளாகிய குதிரைகளின் தலைவன், மனித உடல் கொண்டு கீழிறங்கி வந்த ஸாவித்ரிக்கு மனித உடல் தந்த தந்தையே அசுவபதி. 

இவர் ஒரு மகாதபஸ்வியாக குறிக்கப்படுகிறார். தபஸ் என்றால் ஒருமுகப்படுத்தப் பட்ட ஆன்மீக ஆற்றல் என்று பொருள். இந்த தவ ஆற்றல் மூலமே மனிதன் மரணத்திலிருந்து மரணமற்ற பெருவாழ்விற்கு செல்கிறான். 

துயுமத்சேனன் சத்தியவானின் தந்தை, இவர் ’தெய்வீக மனம் எப்படி வீழ்ச்சியுற்றுக் குருடாகியது’ என்பதன் சங்கேதக் குறிப்பு. மனிதனிடம் இருந்த தெய்வீக மனம் எப்படி தெய்வீகத்தன்மையை இழந்து அதன் பெருமையை இழந்தது என்பதன் குறியீட்டு விளக்கமே அக்கதாபாத்திரம். 

இவை வெறுமனே ஒரு கதை அல்ல, இந்த பெயர்கள், கதாபாத்திரங்கள் தனிப்பட்ட வாழ்ந்த மனிதர்களைப் பற்றியதல்ல! இது உணர்வு சக்தி எனப்படும் ஆன்மாவானது, எப்படி தன்னை மனித உடலில் பலவிதமாக அவதரிக்கச் செய்து, விடுதலையுறுகிறது என்பது பற்றிய மறைபொருள் உண்மைகள் பொதிந்திருக்கும் தளம். 

இதன் மூலம் இது மனிதனிற்கு ஒளிபாய்ச்சி மனித உடல் எப்படி தனது மரணமுறும் நிலையிலிருந்து மரணமற்ற நிலைக்கு தெய்வீக உணர்வினால் உயர்த்தப்படுகிறது என்பதை அறிய உதவி செய்கிறது. 

இப்படியாக ஸாவித்ரியிற்கு ஆசிரியராக ஸ்ரீ அரவிந்தர் குறிப்பு வரைந்துள்ளார். 

இது இந்திய மெய்யியலில் ஆன்மா அல்லது உணர்வு எத்தகைய உயர் நிலையை அடையலாம் என்பதையும், எப்படி அடையலாம் என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் தனது சொந்த யோக சாதனையிலிருந்து பெற்ற அனுபவத்தை ஆங்கிலத்தில் காவியமாகப் படைத்திருக்கிறார். 

ஸ்ரீ ஸக்தி சுமனன்

(தொடரும்….)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்